Published : 20 Feb 2018 12:01 PM
Last Updated : 20 Feb 2018 12:01 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘குரைக்கும் நாய்’ என்று பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் ஷரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, பல்வேறு சோதனை நடத்தி வருகிறது.
இந்த வங்கி மோசடி தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூறுகையில், “ பிரதமர் மோடி வங்கி மோசடி குறித்து வாய் திறக்க மறுக்கிறார். ஆட்சிக்கு வரும்போது, நாட்டின் காவலாளியாக இருப்பேன் என்றார். தானும் ஊழல் செய்யமாட்டேன், மற்றவர்களையும் ஊழல் செய்யவிடமாட்டேன் என்றார். ஆனால், இவர் ஆட்சியில்தான் லலித் மோடி, மல்லையா, நிரவ் மோடி தப்பிச் சென்றனர்” என நேற்று விமர்சித்தார்.
உத்தரப்பிரதேச பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் ஷரண் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அவரிடம் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘குரைக்கும் நாய்’ போன்றவர். நாய் குரைப்பது போல், அவர் எப்போதும் ஏதாவது விமர்சித்துக்கொண்டே இருப்பார். ஆனால், பிரதமர் மோடி யானை போன்றவர். நாய் குரைத்தாலும், யானை அதன்போக்கில் கண்டுகொள்ளாமல் போய்கொண்டே இருக்கும். பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். ஆதலால், யாரெல்லாம் குரைக்க முடியுமோ அவர்கள் குரைக்கலாம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது, அனைத்து விதமான ஊழல்களும் நடந்தன. ஆதலால் ராகுல் காந்தி ஊழல் குறித்து எந்தவிதமான விளக்கமும் மத்தியில் ஆளும் பாஜகவை கேட்க உரிமை இல்லை. இப்போதுள்ள மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் அரசின் ஊழல்களை விசாரித்து வருகிறது. அதனால், ஊழல்கள் அனைத்தும் வெளிப்பட்டு வருகிறது.
தன்னுடைய மைத்துனர் ராபர்ட் வத்ரா, தாய் சோனியா காந்தி ஆகியோரின் ஊழல்கள் ஏதும் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ராகுல் காந்தி அலறுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT