Published : 23 Jan 2024 01:59 PM
Last Updated : 23 Jan 2024 01:59 PM

“அயோத்தி திரேதா யுகத்துக்கு திரும்பியதுபோல் உள்ளது” - ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் நெகிழ்ச்சி

அயோத்தி: அயோத்தி, திரேதா யுகத்துக்கு திரும்பியதுபோல் உள்ளது என்று ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் நெகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் இன்று (ஜன.23) முதல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். ஜெய் ஸ்ரீ ராம் உள்பட பல்வேறு விதமான ராம கோஷங்களையும் பக்திப் பாடல்களையும் பாடியவாறு பக்தர் கூட்டம் அயோத்தியை முற்றுகையிட்டுள்ளது. நகர் முழுவதும் காவிக்கொடியுடன் பக்தர்கள் காணப்படுகின்றனர். ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அயோத்தியில் ஏற்பட்டுள்ள பக்தி எழுச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், "குழந்தை ராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். ராமர் வாழ்ந்த திரேதா யுகத்துக்கு அயோத்தி திரும்பியதைப் போல உள்ளது.

பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு அயோத்தி நகரமே தூய்மை அடைந்துள்ளது. திரேதா யுகத்தில் வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியபோது நகர மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அதுபோன்ற ஒரு தருணத்தை இன்று பார்க்க முடிகிறது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எதிரெலிக்க ஏராளமான பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். இது திரேதா யுகத்துக்கு அயோத்தி திரும்பிவிட்டதைப் போல தெரிகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், அனைவருக்குமே இன்று தரிசனம் கிடைக்காது. நாளைக்கும் இதேபோன்ற கூட்டம் இருக்கும். இன்னும் சில நாட்களுக்கு கூட்டம் அதிகமாத்தான் இருக்கும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் அயோத்தி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களோடு குறைந்தபட்சம் 4 பேரையாவது அழைத்து வருகிறார்கள். இதன் காரணமாகவே கூட்டம் அதிகமாக உள்ளது. ஒவ்வொருவரும் அன்பாக பழக வேண்டும். அயோத்தியில் இருந்து மாற்றம் நாடு முழுவதும் பரவும். இது மிக அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் இணக்கத்தோடு வாழ வேண்டும். நல்லெண்ணத்தோடு நாம் வாழ வேண்டும். பகவான் ராமரின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என தெரிவித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையினரோடு, அதிரடி காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படையான சஷாத்ரா சீமா பால் ஆகியவை களத்தில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x