Published : 23 Jan 2024 01:26 PM
Last Updated : 23 Jan 2024 01:26 PM

அசாம் | ராகுல் காந்தியின் யாத்திரை தடுத்து நிறுத்தம்: காங்., தொண்டர்கள் - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு

அசாமில் ராகுல் காந்தி

குவாஹாட்டி: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அசாம் தலைநகர் குவாஹாட்டிக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்தடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று (ஜன.22) அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். துறவி, அறிஞர், சமூக - மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார். ஆனால், அந்தக் கோயிலுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு, ஒரே நாளில் ராமர் கோயில் திறப்பு, ராகுல் யாத்திரை என இரண்டு நிகழ்வுகள் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக் காரணம் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று (ஜன.23) அசாம் தலைநகர் குவாஹாட்டிக்குள் நுழைய முயன்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி குவாஹாட்டியின் பிரதான பகுதிகள் வழியாக யாத்திரையை மேற்கொள்ளாமல் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறி யாத்திரை தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்ட பாதையில் நடக்கவில்லை என்று அசாம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று போக்குவரத்து நெரிசல் காரணத்துக்காக தடுக்கப்படுவதாக போலீஸார் கூறியதால் காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்தனர்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு: இதற்கிடையில், அசாம் - மேகாலயா எல்லையில் பேருந்தின் கூரையில் நின்றபடி ராகுல் காந்தி மேகாலயாவின் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர், “நான் உங்களை சந்தித்து உரையாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் உள்துறை அமைச்சர் அசாம் முதல்வரிடம் பேசி மேகாலயா தனியார் பல்கலைக்கழகத்தில் நான் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார். அவர் அந்தப் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பேசியுள்ளார். மேல்மட்ட அழுத்தத்தினால் நான் உங்களை அங்கே சந்திக்க இயலவில்லை.

இங்கே பிரச்சினை, நான் அனுமதிக்கப்படவில்லை என்பது இல்லை. நீங்கள் யாருடைய பேச்சைக் கேட்க விரும்புகிறீர்களோ அதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழ வேண்டுமே தவிர மற்றவர்கள் வகுக்கும்படி வாழக்கூடாது. உங்களை அவர்கள் அடிமைகளாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் யாரும், எந்த சக்தியும் அதை இந்த பிரபஞ்சத்தில் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும்” என்று விமர்சித்துப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x