Published : 23 Jan 2024 12:28 PM
Last Updated : 23 Jan 2024 12:28 PM

உ.பி.யில் ராமர் கோயில் திறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என பெயர் சூட்டிய முஸ்லிம் குடும்பம்

பிரதிநிதித்துவப்படம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று (திங்கள்கிழமை) ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளில் பிறந்த முஸ்லிம் குடும்பத்து குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்குள்ள ஃபிரோஸாபாத் நகரில் பிறந்த அக்குழந்தைக்கு இந்து - முஸ்லிம் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட மகப்பேறு மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் நவீன் ஜெயின் கூறுகையில், “இங்கு திங்கள்கிழமை ஃபர்சானா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். குழந்தையின் பாட்டி ஹுஸ்னா பானு அக்குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டினார்” என்றார். குழந்தையின் பாட்டி பானு இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்த செய்தியை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் குழந்தைக்கு இந்தப் பெயரை தான் வைத்ததாக தெரிவித்தார்.

இதனிடையே, கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் மகப்பேரியல் மற்றும் பெண் நோயியல் துறையின் பொறுப்புத் தலைவர் சீமா திவேதி ஊடகப் பேட்டியில், “இங்கு திங்கள்கிழமை 25 குழந்தைகள் பிறந்தன. அவைகளில் 10 பெண் குழந்தைகள், மீதமுள்ளவை ஆண் குழந்தைகள். அனைத்து குழந்தைகளும் இயல்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளன. அதில் பாரதி மிஸ்ரா என்பவர் தனது ஆண் குழந்தைக்கு ராமர் என்று பெயர் சூட்டியுள்ளார். அது குழந்தைக்கு நேர்மைறையான ஆளுமை பண்பை உருவாக்கும் என்று நம்புகிறார். மற்ற ஆண் குழந்தைகளின் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ராகவ், ராகவேந்திரா, ராகு மற்றும் ராமேந்திரா என ராமருடன் தொடர்புடைய பெயர்களை வைத்தனர்” என்று தெரிவித்தார். மேலும், அயோத்தியில் ஜன.22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் படி தன்னிடம் பல தாய்மார்கள் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், சம்பல் மாவட்டத்தின் சந்தவுசியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள பிரசவ அறையில் ராமர் கோயிலின் மாதிரி (மினியேச்சர்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. கர்ப்பிணிகள் தங்களின் பிரசவத்துக்கு முன்னால் கடவுள் ராமரை தரிசம் செய்தனர். இதுகுறித்து மருத்துவர் வந்தனா சக்சேனா , “அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நல்ல நாளில் நான் எனது மருத்துவமனையின் பிரசவ அறை மற்றும் குழந்தைகள் அறைகளை காவி நிறத்தில் அலங்கரித்திருந்தேன். அதேபோல் குழந்தைகள் அறையில் ராமரின் சிறிய உருவத்தை வைத்திருக்கிறேன். இங்கு நேற்று மூன்று ஆண் குழந்தைகள் உட்பட 6 குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ராமரின் பெயரையும், பெண் குழந்தைகளுக்கு ஜானகி மற்றும் சீதா பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர்.

பதோகியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் திங்கள் கிழமை 33 குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பதோகியின் தலைமை மருத்துவ அலுவலர், சந்தோஷ் குமார் சாக் கூறுகையில், "நேற்று பிறந்த பல குழந்தைகளின் தாய்மார்கள் ஜன.22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனர்.

நேற்று 15 ஆண் குழந்தைகள், 18 பெண் குழந்தைகள் பிறந்தன. இதில் பாதி அறுவை சிகிச்சை பிரசவம். இதில் ஆண் குழந்தைகளின் பெற்றோர் ராமரின் பெயரையும், பெண் குழந்தையின் பெற்றோர் சீதாவின் பெயரையும் குழந்தைகளுக்குச் சூட்டினர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x