Published : 23 Jan 2024 11:54 AM
Last Updated : 23 Jan 2024 11:54 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தியில் நேற்று திறந்து வைக்கப்பட்ட ராமர் கோயிலில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் தொழில்நுட்பப் பின்னணியில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் ’ஒரே பாரதம் உன்னத பாரதம்’ கொள்கை ராமர் கோயில் முழுவதிலும் பிரதிபலிக்கிறது. கோயிலின் கதவுகள், மணிகள் மற்றும் ராமருக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களின் கைவினைக் கலைஞர்களால் தன் பகுதியின் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோயில் கட்டப் பயன்டுத்தப்பட்டப் பளிங்குக் கற்கள், பழங்காலக் கட்டிடக்கலையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை கட்டிட அமைப்பால் கோயிலுக்கு பல வருடங்கள் வரை பராமரிப்பும் தேவை இல்லை எனக் கருதப்படுகிறது. இதனால் கோயிலின் ஆயுள் பல நூற்றாண்டுகள் வரை நீடித்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கோயிலில் பயன்படுத்தப்பட்ட இந்த சலவைக் கற்கள் ஒரு செ.மீ அளவும் வித்தியாசம் இன்றி, ஒரே அளவில் செய்யப்பட்டவை. கட்டும்போது இக்கற்களின் அளவில் வித்தியாசம் வந்தால் அதை தவிர்த்துவிட்டு புதிதாக ஒரு கல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியபடி வைக்கப்பட்ட கற்களின் இடையே சிமெண்ட் உள்ளிட்ட எந்தவிதமானக் கலவைகளும் பயன்படுத்தப்படவில்லை.
ராமர் கோயிலில் பிரதானமாக ராஜஸ்தானின் மக்ரானாவை சேர்ந்த பிரபல வெள்ளைநிறப் பளிங்குக்கற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் தேவைக்கேற்றபடி வேறுபல மாநிலங்களின் பிரபலமான பளிங்கு சலவைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், தெலங்கானா மற்றும் கர்நாடகாவின் சார்மவுத்தி கல், ராஜஸ்தானின் பன்ஸி பஹார்பூரின் ரோஜாநிறக் கல் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மரவேலைப்பாடுகளுக்கான மரங்களும் பல மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவிலிருந்து தேக்கு மரங்கள், இமயமலையின் அருணாச்சாலப் பிரதேசம் மற்றும் திரிபுராவிலிருந்து கலைப்பொருட்களுக்கான மரங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இவற்றை செய்யும் கலைஞர்கள் அனைவரும் தம் திறமையுடன் முழுமனதையும் பயன்படுத்தி ஆத்மார்த்தமாக ஆன்மீகப் பணியாக செய்து வருகின்றனர்.
பெரும்பாலானப் பழங்காலக் கோயில்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு அமைப்பது உண்டு. அன்றாடம், மாடம் அல்லது வருடத்த்துக்கு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் கருவறை அல்லது கோயிலின் முக்கியப் பகுதியில் சூரியவெளிச்சம் பாய்வது உண்டு. இந்தவகையில், நவீனகாலத்தில் கட்டப்பட்ட கோயிலின் கருவறையிலும் வருடம் ஒருமுறை ராமர் சிலையின் தலைப்பகுதியில் சூரியவெளிச்சம் பாய்கிறது. இதற்கு சூரிய திலகத் தொழில்நுட்பம் என்கின்றனர்.
இது சுமார் ஆறு நிமிடங்களுக்கு மட்டும் வருடம் ஒரு முறை ராமநவமி அன்று சரியாக நண்பகல் 12.00 மணிக்கு பாயும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்து காலண்டரின் முதல் மாதத்தின் ஒன்பதாவது நாளில் இது மார்ச் முதல் ஏப்ரலுக்குள் வருகிறது. இந்த சூரிய திலகப் பாய்ச்சலை கர்நாடகா பெங்களூருவிலுள்ள டிஎஸ்டி-ஐஐஏ நிறுவனம் செய்துள்ளது.
இதுபோன்ற பல தொழில்நுட்ப உதவிகள் மத்திய அரசின் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. தேசிய அறிவியல் மற்றும் தொழிலாய்வு நிறுவனம்(சிஎஸ்ஐஆர்), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்(டிஎஸ்டி), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) மற்றும் சென்னை, மும்பை, குவாஹாட்டி ஆகிய ஐஐடி கல்வி நிறுவனங்கள் ஆகியன இதில் இடம் பெற்றுள்ளன.
உத்தராகண்ட் மாநிலம் ருடுகியின் சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ நிறுவனத்தின் பங்கு கோயில் கட்டும் பணியிம் மிக அதிகமாக உள்ளது. நிலஅதிர்வு சமயங்களில் கோயிலை பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை ஐதராபாத்தின் சிஎஸ்ஆர்ஐ-என்ஜிஆர்ஐ அமைத்துள்ளது.
எந்தவித இரும்பும் பயன்படுத்தாமல் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் உள் மொத்தம் 300 தூண்களும், 44 தேக்குமரக் கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அம்சங்களுடன் இகோயில் கட்டும் பணி நாட்டின் முக்கியப் பெரு நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலுக்கான வடிவத்தை 1988 இல் குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள சோம்புரா குடும்பத்தினர் அமைத்துள்ளனர். இக்குடும்பத்தினர் கடந்த 15 தலைமுறைகளாக சர்வதேச நாடுகளில் சுமார் நூறு கோயில்களை வடிவமைத்துள்ளனர். பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு பின் 2020 இல் பழைய வடிவத்தை லேசான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியின் புதிய ராமர் கோயிலின் தலைமை வடிவமைப்பாளராக சந்திரகாந்த் சோம்புராவும் அவருக்கு உதவியாக அவரது மகன்களான நிகில் சோம்புரா மற்றும் ஆஷிஷ் சோம்புரா உள்ளனர். நாக்ரா கட்டிடக் கலையில் இது உலகின் மூன்றாவது பிரம்மாண்டமானக் கோயிலாக அமைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT