Published : 22 Jan 2024 05:09 PM
Last Updated : 22 Jan 2024 05:09 PM

“இது கவலை அளிக்கிறது... மதம் வேறு, அரசு வேறு!” - கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

திருவனந்தபுரம்: “நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவுற்றதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மதத்துக்கும் அரசுக்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியதாகக் காணப்படுகிறது. இது கவலை அளிக்கிறது. மதம் வேறு; அரசு வேறு. இரண்டும் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியுள்ளார். தற்போதைய போக்கு அவர் அளித்த உறுதிமொழிக்கு எதிரானது.

மத வழிபாட்டுத் தலத்தின் திறப்பு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடும் ஒரு கட்டத்தில் தற்போது நாம் இருக்கிறோம். மதச்சார்பற்ற நாடு என்றால், மத நிகழ்வுகளில் அரசு பங்கேற்காது என்ற நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வகுத்துத் தந்த புள்ளியில் இருந்து நாம் தற்போது இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

மதச்சார்பின்மைதான் இந்திய குடியரசின் ஆன்மா. தேசிய இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இது இந்தியாவின் அடையாளமாக இருந்து வருகிறது. பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என அனைவரும் இணைந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள். இந்த நாடு அனைத்து சமூகங்களுக்குமானது. அனைவருக்கும் சமமானது.

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நாட்டு மக்கள் அனைவரும் மதத்தை கடைப்பிடிக்கவும், பரப்பவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது. இந்த நிலத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் இந்த உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்தவர்களுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், மற்ற மதங்களுக்கு மேலாக ஒரு மதத்தை உயர்த்தவோ, மற்ற மதங்களுக்கு கீழாக ஒரு மதத்தை தாழ்த்தவோ கூடாது.

மதம், மொழி, பிராந்திய அல்லது பிரிவு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்திய மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவ உணர்வையும் வளர்க்க, ராமர் கோயில் திறப்பு விழா ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞான மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றின் வளர்ச்சியில்தான் நாட்டின் செழிப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x