Published : 22 Jan 2024 10:17 AM
Last Updated : 22 Jan 2024 10:17 AM
புதுடெல்லி: அயோத்தியில் ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிலையில், “இந்த வரலாற்று தருணம் இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மேலும் வளப்படுத்தி, நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி கோயிலை திறந்து வைக்கிறார். இதற்காக கடந்த 16 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. இதையொட்டி, இன்று நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. மேலும் அயோத்தியில் பிரபலங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலில், ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்ய நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில், அந்த புனிதமான வளாகத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தனித்துவமான நாகரீகத்தின் பயணம் முழுமையடையும் என்பதை நான் உணர்கிறேன். நமது தேசத்தின் மறுமலர்ச்சியில் ஒரு புதிய சுழற்சியின் தொடக்கத்தைக் காணவிருக்கும் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“குடியரசுத் தலைவர் அவர்களே, உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இந்த வரலாற்று தருணம் இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மேலும் வளப்படுத்தி, நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...