Published : 27 Feb 2018 07:58 AM
Last Updated : 27 Feb 2018 07:58 AM
அ
ரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை புதிதல்ல. ஆனால் அடிதடி வரைக்கும் போனது உண்மையிலேயே மோசமானது.
ஆம் ஆத்மி கட்சியே சண்டைக் கோழிகளால் ஆனது என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. டெல்லியில் பாஜகவை வீழ்த்தி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆம் ஆத்மியை செயல்படவிடாமல் பனிப்போர் நடத்தி வருகிறது மத்திய அரசு. இதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. அதேபோல், எல்லோரும் விரும்பும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான டெல்லி மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ், முதல்வர் கேஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை முதல்வர்கள் அசிங்கப்படுத்துவதும் புதிதல்ல.
மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோது,`டிரான்ஸ்பர் குயீன்' என்றே அழைக்கப்பட்டார். அந்த அதிகாரத்தில் அவருக்கு அவ்வளவு பெருமை. 2005-ல் ஒருமுறை அவரை பேட்டி கண்டபோது, இதை என்னிடம் கூறி பெருமைப்பட்டார். அவர் தனது குரு கன்ஷிராமை முதன்முதலில் சந்தித்தபோது, ஐஏஎஸ் படிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கன்ஷிராம்தான் `நீ ஐஏஎஸ் ஆக விரும்புகிறாய்.. அரசியலுக்கு வா... ஐஏஎஸ் அதிகாரிகள் அத்தனை பேரும் உனக்கு சேவகம் செய்யும் ஆளாக உன்னை மாற்றுகிறேன்..' எனக் கூறி அழைத்து வந்தார். சொன்னபடி செய்தும் காட்டினார். 2007-ம் ஆண்டு நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, `என் பெயரைக் கேட்டாலே அதிகாரிகள் நடுங்குவார்கள்' என பெருமையாகக் கூறினார். ஐஏஎஸ் அதிகாரிகளை இஷ்டத்துக்கு அடிக்கடி இடமாற்றம் செய்தார். அடுத்த இடமாற்றம் எப்போது வருமோ என்ற பயத்திலேயே அவர்கள், போகும் இடத்துக்குக் குடும்பத்தை அழைத்துச் செல்வதில்லை.
ஹரியாணாவிலும் இதே கதைதான். பன்ஸிலாலும் ஓம் பிரகாஷ் சவுடாலாவும் அதிகாரிகளை ஊழல் வழக்கு, விசாரணை எனக் கூறி இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் எனது 40 ஆண்டுக்கால பத்திரிகை வாழ்க்கையில், மூத்த அதிகாரியை, அதுவும் தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் அதிகாரியை கை நீட்டி யாரும் அடித்ததாக நினைவில்லை.
மருத்துவ அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் மீது தாக்குதல் நடந்தது உண்மை தான் எனத் தெரிய வந்திருக்கிறது. முதல்வர் கேஜ்ரிவாலின் ஆலோசகர் வி.கே. ஜெயினே, தாக்குதல் நடந்ததைப் பார்த்ததாகக் கூறியிருக்கிறார்.
அப்படி நடக்கவே இல்லை என மறுத்த ஆம் ஆத்மி தலைவர்களும், செய்தித் தொடர்பாளர்களும் இப்போது, வேறு மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். ``நீதிபதி லோயா கொலை வழக்கில் அமித் ஷாவை விசாரிக்க மாட்டீர்கள்.. ஆனால் ரெண்டே ரெண்டு அறை விட்டதற்காக, முதல்வர் வீட்டுக்கே போலீஸை அனுப்பி விசாரிப்பீர்களா..'' என கோபமாகக் கேட்கிறார்கள். உத்தம் நகர் ஆம் ஆத்மி எல்எல்ஏ நரேஷ் பல்யான், ``சரியாக வேலை செய்யாத இவர் போன்ற அதிகாரிகளை இப்படித்தான் போட்டுத் தாக்கணும்..'' எனப் பேசியிருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசும் கேஜ்ரிவால் அரசும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்தடுத்து வந்த துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசின் முடிவுகளை மதிப்பதே இல்லை. மாநில அரசின் பணி நியமனங்களை மறுப்பதும் மாற்றுவதும் நடக்கிறது. முதல்வரின் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திர குமார் வீட்டில், ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆம் ஆத்மி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு, மத்திய அரசின் கைக்கு வந்துவிட்டது. இதில் லேட்டஸ்ட், இரட்டைப் பதவி வகித்த 20 ஆம் ஆத்மி எல்எல்ஏக்களின் பதவியைப் பறித்ததோடு, உடனடியாக அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றதில் தேர்தல் ஆணையம் காட்டிய வேகம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் முதல்வரின் வீட்டில் போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய சோதனை பகையுணர்ச்சியின் உச்சக்கட்டம்.
இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து தான் நிர்வாக ரீதியாக அதிக அளவில் தொல்லைகள் தரப்பட்டன. பதிலுக்கு ஆம் ஆத்மியும் காரசாரமாக திட்டித் தீர்த்தது.
ஆம் ஆத்மி கட்சியே சண்டைக் கோழிகளின் கட்சிதான். இதுபோன்ற தாக்குதல்களை அவர்கள் நியாயப்படுத்தினால், இவர்களை விட மோசமான அரசியல் தலைவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ..? இரண்டரை லட்சம் பேருக்கு ரேஷன் மறுக்கப்பட்டுள்ளது.. அவர்களை தலைமைச் செயலாளரும் அதிகாரிகளுமா நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார்கள். அரசியல்வாதிகள்தானே சந்திக்க வேண்டியிருக்கிறது என கேட்கிறார்கள். அப்படியானால், அரசியல்வாதிகள் மக்களை அதிகாரிகளுக்கு எதிராக திசை திருப்பி விடுவார்களா..?
பிரச்சினைகள் குறித்து கருத்து வேறுபாடு அடிக்கடி வரும். மாநிலத்தின் தலைவர் என்பவர் முதல்வர்தான். பிரச்சினையை கை மீறாமல் எப்படித் தீர்க்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். முடியாவிட்டால், சட்டப்படி தீர்வு காண முயல வேண்டும். அதுவும் முடியாவிட்டால், மக்களைத் திரட்டிப் போராடலாம். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு, ரெண்டே ரெண்டு அறைதான் விட்டோம் என சொல்வது பெருமையாக இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேஜ்ரிவால் ஆகிய மூன்றுபேரும் அரசியலை கலகலப்பாக வைத்திருப்பார்கள். பத்திரிகையாளர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் என கடந்த 2014-ம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தேன். மோடி மிதவாத அரசியல்வாதியாகவும் ராகுல் மக்களிடம் கலந்து பழகுபவராகவும் கடைசியாக கேஜ்ரிவால் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடப்பவராக மாறுவார் என்றும் எழுதியிருந்தேன். எனது கடைசி நம்பிக்கை மட்டும் பொய்த்துவிட்டது.
சேகர் குப்தா,
‘தி பிரிண்ட்’ தலைவர்
முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ். ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT