Published : 19 Feb 2018 07:55 AM
Last Updated : 19 Feb 2018 07:55 AM
எ
ஸ்பிஐ வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கிய ஜிம்மி நகர்வாலா திருப்பித் தராமல் ஏமாற்றினார். இப்படி ஆரம்பித்த மோசடி, இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடியை ஏமாற்றியதில் வந்து நிற்கிறது. மோடி அரசு ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஒரு நெருக்கடி வரும்போது அதை வீணடிக்கக் கூடாது. துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளும், ரிஸ்க் எடுக்கப் பயப்படுபவர்களும், சந்தர்ப்பவாதிகளும் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி இவற்றுக்கு எதிரானவர். இந்திரா காந்திக்குப் பிறகு, விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அரசியலில் துணிந்து முடிவு எடுப்பவர் மோடி. இவருடைய துணிச்சல் மூலம்தான் இந்திரா காந்தி எடுத்த ஒரு அபத்தமான முடிவை மாற்ற முடியும்.
கடந்த 1969-ம் ஆண்டு காங்கிரசை இந்திரா காந்தி உடைத்தபோது, சோஷலிச கொள்கைகளால் உந்தப்பட்டு, பெரிய தனியார் வங்கிகளை அரசுடமையாக்குவதாக அறிவித்தார். 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாகும்வரை பல வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. அதோடு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அரசுடமையாக்கப்பட்டு, நிதி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குப் போனதால் நிதி சம்பந்தப்பட்ட அனைத்தும் அரசுகளின் கைக்குள் வந்தன. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். பணக்காரர்களை வாட்டி வதைத்து, ஏழைகளுக்கு பெரிதாக ஏதோ செய்யப்போவதாக ஏழைகளை நம்பவைத்தார்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏழைகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள். இந்திரா காந்தி தொடர்ந்து வெற்றி வெற்று வந்தார். 1973-ல் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைத் தொடர்ந்து நாட்டின் பணவீக்கம் 20 சதவீதத்தைத் தாண்டியபோதுதான், சோஷலிச கொள்கைகளால் எந்தப் பலனும் இல்லை என அவரே இதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்டார். அந்த சரிவிலிருந்து மீள இந்தியாவுக்கு 40 ஆண்டுகள் ஆனது.
மக்களுக்கு இலவசங்களை அள்ளி வழங்குவது எவ்வளவு எளிது, எவ்வளவு லாபம் என அரசியல் வரலாற்றில் நாம் தெரிந்து கொள்ளலாம். அதை நிறுத்துவது ஆபத்தானது என்றும் தெரியும். ஆனால் தைரியமான பொருளாதார நிபுணர்கள் அதைச் செய்வார்கள். நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் அதன் பிறகு, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் துணையுடன் அடல் பிஹாரி வாஜ்பாயும் அதைச் செய்தார்கள்.
இதைவிடவும் பெரிதாக மோடி செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. திவாலாகும் நிலையில்தான் தற்போது வங்கிகள் இருக்கின்றன. பணக்காரர்களாலும் ஊழல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மக்களின் பல ஆயிரம் கோடி வரிப் பணத்தை கடந்த 4 ஆண்டுகளில் மோடி மூலதனமாக அளித்திருக்கிறார்.
இந்திய நிதித்துறையில் முக்கியப் பங்காற்றும் 21 அரசுத் துறை வங்கிகள் இணைந்து, இந்திய சந்தையில் 55 முதல் 60 சதவீத பங்கை வைத்திருக்கின்றன. பெரும்பாலான வங்கிகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் எஸ்பிஐ உள்பட அனைத்து வங்கிகளும் சேர்ந்தாலும் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை விடக் குறைவாகவே உள்ளது. இது, தொடங்கி 23 ஆண்டுகள் மட்டுமே ஆன எச்டிஎப்சி சந்தை மதிப்பைவிடக் குறைவு. ஆனால் சில பொதுத்துறை வங்கிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.
ஏதாவது ஒரு நிறுவனத்தின் எந்த பங்குதாரரையும் கேளுங்கள். நிதியை நிர்வாகம் சரியாகக் கையாளவில்லை என்றால் என்ன செய்வார்கள் என்று? உதைத்து வெளியேற்றி விடுவார்கள். அரசு நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு. அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அதோடு, மேலும் மேலும் மோசடி நடக்க துணைபோகும் வகையில் அரசே பணத்தை வாரி இறைக்கும்.
இதனால் பலன் அடைந்தது நகை வியாபாரிகளான மோடிகள், மல்லையா மற்றும் நூற்றுக்கணக்கான பணக்கார வேடதாரிகள்தான். அவர்கள் திருப்பிச் செலுத்தாத கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாது. அவற்றுக்கு திருப்பதி மொட்டைதான்.
கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட பெயர்களே திரும்பத் திரும்ப வரும். ஏமாற்றிய அரசு வங்கிகளிடமே திரும்பவும் புதிய மோசடித் திட்டங்களோடு வந்து கடன் வாங்கிவிட்டு ஏமாற்றி விடுவார்கள்.
இப்படி ஏமாற்றப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்துமே பொதுத்துறை வங்கிகள்தான்.
பொதுத்துறை வங்கிகளின் சந்தை மதிப்பு, 50 சதவீத தனியார் வங்கிகளின் சந்தை மதிப்பைக் கொண்டிருந்தாலே, குறைந்தபட்சம் அரசுக்கும் வரி செலுத்தும் மக்களுக்கும் 10 லட்சம் கோடி லாபம் கிடைத்திருக்கும். ஏழைகளுக்கு கடன் கொடுப்பதால்தான் இவை நஷ்டம் அடைகின்றன எனச் சொல்வது அபத்தம். நடுத்தர மக்கள் எப்படியும் கடனை திருப்பிச் செலுத்தி விடுவார்கள்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, பரீத் ஜக்காரியா டெல்லியில் ஜவஹர்லால் நேரு நினைவு சொற்பொழிவாற்றினார். அப்போது, பணக்கார நாடுகளில் எல்லாம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது, இந்திய வங்கித் துறை அதில் இருந்து தப்பியதை பாராட்டிப் பேசினார். அதில் பேசிய சோனியா காந்தி, அதற்கு ஒரே காரணம் இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுடமை ஆக்கியதுதான் என இந்திராவைப் புகழ்ந்தார்.
இப்படிப்பட்ட காந்தி குடும்பத்தினர், இந்திரா காந்தி செய்த மிகப் பெரிய பொருளாதார தவறை, பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கைக் குறைப்பதன் மூலம் திருத்துவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மோடியும் ஏன் இதேபோல் இருக்கிறார் என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது.
இதுபோதாதென்று, மேலும் 2.11 லட்சம் கோடி வரிப் பணத்தை இந்த வங்கிகளில் முதலீடு செய்வது என்ன நியாயம்?
அதனால்தான் மோடி இந்த வங்கிகளை கைவிட வேண்டும். விற்றுவிட வேண்டும். மறந்துவிட வேண்டும். இதுதான் தற்போது எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். அவர் மிகவும் வெறுக்கும் காந்தி குடும்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய உறுப்பினரை குறை கூறும் திருப்தியும் அவருக்குக் கிடைக்கும்.
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT