Published : 20 Jan 2024 04:28 PM
Last Updated : 20 Jan 2024 04:28 PM
தேஜ்பூர்: அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் நக்சல் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் பூடான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் எல்லை பாதுகாப்புப் படையான சஷாஸ்த்ரா சீமா பால் தோற்றுவிக்கப்பட்டதன் 60-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அசாமின் தேஜ்பூர் அருகே உள்ள சலோனிபாரி என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் அமித் ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "நாட்டில் உள்ள பிற பாதுகாப்புப் படைகளைப் போல, சஷாஸ்த்ரா சீமா பால் எல்லையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை நாட்டின் கலாச்சாரம், வரலாறு, நிலப்பரப்பு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைத்து, அவர்களை நாட்டின் பிற பகுதி மக்களோடு இணைக்கும் தனித்துவமான பணிகளை சஷாஸ்த்ரா சீமா பால் மேற்கொண்டு வருகிறது.
எல்லைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, மற்ற மத்திய ஆயுத காவல் படைகளுடன் இணைந்து சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள நக்சல்களுக்கு எதிராக தங்கள் கடமைகளை சஷாஸ்த்ரா சீமா பால் திறம்பட மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் நக்சல் பிரச்சினைக்கு நூறு சதவீதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அஞ்சல் தலையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, சஷாஸ்த்ரா சீமா பால் படைப்பிரிவைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும், மூன்று பட்டாலியன்களுக்கு சிறந்த சேவைக்கான கோப்பைகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT