Published : 20 Jan 2024 04:55 PM
Last Updated : 20 Jan 2024 04:55 PM
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நாடாளுமன்ற ஜனநாயக சிந்தனையை, அரசியல் சாசன அடிப்படையையும் சிதைத்துவிடும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது, தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்காது என்றும், கட்சித் தாவலை ஊக்குவிக்கும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயக சிந்தனையை, அரசியல் சாசனத்தின் அடிப்படையை, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து விடும். இது தொங்கு சட்டமன்றங்களை சமாளிக்க முடியாமல், கட்சித் தாவல் தீமையையும், எம்.பி., எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவதை தீவிரமாக ஊக்குவிக்கும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் மிச்சப்படுத்தப்படும் தொகை என்பது மத்திய பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே. குறுகிய நிதி ஆதாயம் மற்றும் நிர்வாக வசதிக்காக நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பலி கொடுக்க முடியாது" என்று எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது எதிர்பினை தெரிவித்த ஒரு நாளைக்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான திரிணமூல் காங்கிரஸும் இந்தக் கருத்துக்கு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.
அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்து தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாதவாறு இருப்பதுதான் நமது அமைப்பின் அடிப்படை. அதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாமல் இருப்பது என்பது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, “அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு, அதிகாரப் பசி கொண்ட மத்திய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதிஅமைக்கப்பட்ட இக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை 10 நாட்கள் தெரிவிக்கலாம் என்று ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த 5-ம் தேதி கேட்டுக்கொண்டது. கருத்துகளை ஆய்வுக்குழுவின் இணையதளம் அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT