Published : 20 Jan 2024 12:23 PM
Last Updated : 20 Jan 2024 12:23 PM
கொல்கத்தா: அயோத்தியில் ஜன.22-ம் தேதி நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் மேற்கு வங்க மக்கள் பங்கேற்றுக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கும் படி முதல்வர் மம்தா பானர்ஜியை கடிதம் மூலமாக மாநில பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜன.22ம் தேதி மேற்கு வங்கத்தில் பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பதை தயவுசெய்து பரிசீலனை செய்யுமாறு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதன்மூலமாக மேற்கு வங்க இளைஞர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுக் கொண்டாடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தனது கடிதத்தில் மஜும்தார், "கடந்த காலங்களில் முதல்வர் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். அதேபோல் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று மாநிலத்தின் மக்களும் அந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே அன்றைய தினம் பொதுவிடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக்கடிதத்துக்கு பதில் அளித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், "இந்து பஞ்சாங்கம் அல்லது இந்து மத நாட்காட்டிகளில் ராமர் கோயில் திறப்பு குறித்த சிறப்பு நாள்கள் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? சுகந்தா மஜும்தார் எப்போது அர்ச்சகராக மாறினார். பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு (ராமர் கோயில் கும்பாபிஷேகம்) மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ஒரு அரசியல். பாஜக போல அரசியலுடன் மதத்தை கலக்க நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜி ஜன.22ம் தேதி தெற்கு கல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா க்ராசிங்-ல் இருந்து பார்க் சர்க்கஸ் வரை நல்லிணக்கத்துக்கான பேரணியை நடத்துகிறார். அதனைத் தொடரந்து நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். நூற்றாண்டுகள் பழமையான காளிகட் கோயிலில் பூஜை முடித்த பின்னர் தொடங்கும் நல்லிணக்கப் பேரணி அதன் பயணப்பாதையில் இருக்கும் அனைத்து மதக் கோயில்களுக்கும் செல்ல இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT