Published : 20 Jan 2024 05:54 AM
Last Updated : 20 Jan 2024 05:54 AM
அயோத்தி: உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி குழந்தை ராமரின் சிலை நேற்று முன்தினம் மாலைகோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர், வலது கையில் அம்பையும் இடதுகையில் வில்லையும் ஏந்தி நிற்கிறார். தலையில் தங்க கிரீடம் உள்ளது. சிலையின் தோரணத்தில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளன.
குழந்தை ராமர் சிலையின் கண்கள் மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதைத் தொடர்ந்து குழந்தை ராமரின் முழு உருவச் சிலை புகைப்படம் நேற்று முதன்முறையாக வெளியானது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
குழந்தை ராமர் சிலை குறித்துராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை ஷேத்ரா வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 1949-ம் ஆண்டில் ராம ஜென்ம பூமியில் குழந்தை ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளி சிலையின் உயரம் 6 அங்குலம் ஆகும். ராமரின் தம்பிகள்மற்றும் அனுமனின் சிலைகள் இதைவிட உயரம் குறைவாக உள்ளன.
புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில் பக்தர்கள் சுமார் 19 அடி தொலைவில் இருந்து குழந்தை ராமரை வழிபட முடியும். அவ்வளவு தொலைவில் இருந்து 6 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமரை தெளிவாக பார்க்க முடியாது.
எனவே கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ், கணேஷ் பட்மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சத்யநாராயண் பாண்டே ஆகியோர் குழந்தை ராமர் சிலைகளைசெதுக்கினர். கர்நாடகாவை சேர்ந்தஇரு சிற்பிகள் கருங்கல்லிலும்ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி மார்பிள் கல்லிலும் சிலைகளை உருவாக்கினர். இறுதியில் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
இந்த சிலையின் உயரம் 4.5 அடியாகும். சுமார் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. பழைய 6 அங்குல குழந்தை ராமரின்சிலை, புதிய சிலைக்கு வலதுபுறத்தில் நிறுவப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆகம விதிகளின்படி சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
தற்காலிக ராமர் கோயிலில் சனிக்கிழமை காலை முதல் வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. புதிய கோயில் திறப்பு விழா அன்று விவிஐபிக்கள் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர். 23-ம் தேதி முதல் பக்தர்கள் வழிபடலாம். இவ்வாறு அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...