Published : 19 Jan 2024 05:46 PM
Last Updated : 19 Jan 2024 05:46 PM

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு

அயோத்தி ராமர் கோயில்

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளுக்கு வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதால் அந்த நிலம் ராமர் கோயிலுக்கே சொந்தம் என்று ஒரு தரப்பும், மசூதி இருந்த இடம் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பும் வாதிட்டு வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்தது. அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், குடியரசுத் தலைவரின் பரிந்துரையின்பேரில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான ரஞ்சன் கோகாய், முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்தே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் நீதிபதி அஷோக் பூஷன், முன்னாள் நீதிபதியும் தற்போது ஆந்திரப் பிரதேச ஆளுநராக இருப்பவருமான அப்துல் நசீர் ஆகியோர், சர்ச்சைக்குரிய நிலம் ராமருக்கே சொந்தம் என தீர்ப்பளித்தனர்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது திறப்பு விழா காண உள்ளது. இதில் பங்கேற்க 7 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவாயிரம் பேர் விவிஐபிக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துறவிகள், நிதி உதவி அளித்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வரிசையில், ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், தற்போதைய நீதிபதிகள், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் உள்பட நீதித்துறையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலை கட்டியுள்ள ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ராவின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் மகராஜ், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முன்னிலையில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்தியாவின் சுமார் 125 மரபுகளைச் சேர்ந்த துறவிகள் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, குழந்தை ராமர் சிலையை பீடத்தில் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. தற்போது பீடத்தில் உள்ள குழந்தை ராமரின் கண்கள் மூடப்பட்டுள்ளன. பிராண பிரதிஷ்டையின்போது கண்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுவனாக ராமர் சிலை வடிக்கப்பட்டுள்ளது. மைசூருவைச் சேர்ந்த அருண் யோகராஜ் என்ற சிற்பி வடித்த சிலை இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிராண பிரதிஷ்டையை ஒட்டி நவக்கிரக ஹோமங்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x