Published : 19 Jan 2024 04:41 PM
Last Updated : 19 Jan 2024 04:41 PM
மைசூரு: அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையானது, தென்னிந்தியாவின் பழமையான பாறையில் இருந்து செதுக்கப்பட்டது என்றும், இந்தக் கல் 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்றும் ஓய்வுபெற்ற புவியியல் பேராசிரியர் சி. ஸ்ரீகந்தப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள மைசூரு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.ஸ்ரீகந்தப்பா, "மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ள ராமர் சிற்பம்தான் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் இருந்து செதுக்கப்பட்டது. புவியியல் ரீதியாக மைசூரைச் சுற்றியுள்ள பாறைகள் ஆர்க்கேன் தார்வார் கிராட்டன் என்பதன் ஒரு பகுதியாக உள்ளன. இந்தப் பாறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட U-Pb ஐசோடோபிக் ஆய்வுகள், இவை 300 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பதை வெளிப்படுத்தி உள்ளன.
மைசூருக்கு தென் மேற்கே உள்ள சர்கூர் நகரைச் சுற்றி இத்தகைய பாறைகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக இவை பொதுவாக சர்கூர் பகுதி கற்கள் என்றே அழைக்கப்படுகின்றன. மைசூர் பல்கலைகழகத்தின் புவி அறிவியல் துறையால் இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், குழந்தை ராமர் சிலையை செதுக்கப் பயன்படுத்தப்பட்ட பாறை 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், தென்னிந்தியாவின் பழமையான பாறை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ராமர் சிலை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பாறைகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன" என்றுஅவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. அன்று பிராயச்சித்தா உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22-ம் தேதி வரை இந்த சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறினார். தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கங்காதிவஸ் போன்ற பூஜைகள் இனி வரும் நாட்கள் நடைபெற உள்ளன.
வரும் 22-ம் தேதி மதியம் 12.20 மணி அளவில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை மதியம் 1 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டு, கோயில் கருவறையில் நேற்று மாலை நிறுவப்பட்டது.
இந்த சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார். கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலைக்கு கணேச - அம்பிகா பூஜை, வருண பூஜை போன்ற பூஜைகள் 4 மணி நேரம் நடைபெற்றன. இந்த சிலையின் கண்கள், துணியால் மூடப்பட்டுள்ளது. திறப்பு விழா நாளில் இந்த துணி அகற்றப்பட்டு, பிரதிஷ்டை பூஜைகள் நடைபெறும்.
மோடியை கவர்ந்த சிற்பி: கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர். எம்பிஏ படித்துள்ள இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிற்ப கலை மீதான ஆர்வத்தின் காரணமாக பணியில் இருந்து விலகி சிற்பங்களை உருவாக்கும் முயற்சியில்இறங்கினார். இவர் வடித்த சுபாஷ் சந்திரபோஸின் 30 அடி சிலை பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தது. அதனை பிரதமர் மோடி பாராட்டியதால், அதே சிலையை சிறிய அளவிலே செதுக்கி மோடிக்கு பரிசளித்தார். தற்போது அருண் யோகிராஜ் வடித்துள்ள குழந்தை ராமர் சிலை 51 அங்குல உயரம் கொண்டது ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT