Published : 19 Jan 2024 05:45 AM
Last Updated : 19 Jan 2024 05:45 AM

ராமர் கோயில் போலவே இந்தியாவில் அதிக செலவில் கட்டப்படும் கோயில்கள்

அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராமர் கோயில் போலவே, அதிக பொருட்செலவில் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், மத்திய அரசும் சமீப ஆண்டுகளில் பெரும் பொருட் செலவில் கட்டுமானங்களை அமைத்துள்ளது. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்...

ரூ.1,800 கோடியில் ராமர் கோயில்: ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ராமர் கோயில் வளாகத்தின் பரப்பளவு 70 ஏக்கர் ஆகும். அதில் 2.7 ஏக்கர் பரப்பளவில் 161 அடி உயரத்தில் பிரதான கோயில் அமைந்துள்ளது. 12 நுழைவாயில்களும் 3 தளங்களும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை எல்&டி மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஐஐடி வழங்கியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராமர் கோயில் கட்டுவதற்கென்று ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. இந்த அறக்கட்டளைக்கு இதுவரையில் ரூ.3,500 கோடி நன்கொடை வந்துள்ளது. இதில் ரூ.1,800 கோடி மட்டுமே கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்தத் தொகையில் 51.4 சதவீதம் ஆகும். மீதித் தொகை கோயில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.11 லட்சமும் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சமும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

விஷ்வ உமையா கோயில்: ராமர் கோயில் போலவே மேலும் சில கோயில்கள் இந்தியாவில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.1,000 கோடி மதிப்பில் குஜராத்தில் விஷ்வ உமையா கோயில் கட்டப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கிருஷ்ணா லீலா தீம் பார்க் ரூ.700 கோடி மதிப்பிலும், மேற்கு வங்கத்தில் வேத கோளரங்கம் கோயில் ரூ.622 கோடி மதிப்பிலும் அமைகின்றன.

உத்தர பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் சந்த்ரோதயா கோயிலின் மதிப்பு ரூ.500 கோடி என்றும், பிஹாரில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண் கோயிலின் மதிப்பு ரூ.500 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் மத்திய அரசின் பிரம்மாண்ட கட்டுமானங்களில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டது சர்தார் வல்லபபாய் படேலின் சிலையாகும். குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஒற்றுமை சிலை ரூ.2,989 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, ரூ.1,800 கோடி மதிப்பைக் கொண்ட ராமர் கோயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 3-வது இடத்தில் உள்ளது. ரூ.836 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் சென்ற ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

குஜராத்தில் ரூ.800 கோடியில் உருவாக்கப்பட்ட நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் நான்காவது இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

டெல்லியில் ரூ.306 கோடி பொருட் செலவில் கட்டப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா 5-வது இடத்திலும், ரூ.176 கோடியில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவகம் 6-வது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x