Published : 19 Jan 2024 07:08 AM
Last Updated : 19 Jan 2024 07:08 AM
புதுடெல்லி/பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவுஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசின் தரப்பில், “உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு ஜனவரி மாதத்திற்குள் 165.95 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 75.383 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 90.532 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 33.495 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. குடிநீர் தேவைக்காக தினமும் 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு ஏற்றவாறு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகஅரசு நீரை திறந்துவிட வேண்டும்''என கோரப்பட்டது.
இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், “கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. அணைகளில் குறைந்த அளவிலே நீர் இருப்பில் உள்ளது. தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே பெங்களூரு, மைசூரு ஆகிய மாநகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.தமிழகத்துக்கு கூடுதலாக நீரை திறந்தால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடும் நிலையில் கர்நாடகா இல்லை'' என தெரிவிக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, “உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஜனவரி 19-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள் 1.49 டிஎம்சி நீரையும், பிப்ரவரி மாதத்தில் 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதேபோல நிலுவையில் உள்ள நீரில் குறைந்த மழைப்பொழிவு காலத்தில் வகுக்கப்பட்ட பங்கீட்டு கொள்கையின்படி 7.61 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். அதாவது ஜனவரி 19-ம் தேதி முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தமிழகத்துக்கு நீர்செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரைக்கு கர்நாடகாவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக,மஜத ஆகிய எதிர்க்கட்சியினர்காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை பொறுப்பு அமைச்சருமான டி.கே.சிவகுமார், “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது சிரமம். தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment