Published : 18 Jan 2024 09:52 PM
Last Updated : 18 Jan 2024 09:52 PM
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் ‘ராமர் கோயில்’ திறப்புக்கு எதிர்க்கட்சிகள் ரியாக்ஷன் என்ன என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராமர் கோயிலில் பூஜைகள் தொடங்கியிருக்கும் சூழலில், கோயில் திறப்பு விழாவை பாஜக அரசியலாக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. அழைப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் என்னென்ன?
சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: “மத உணர்வுகளைப் பாஜக தவறாக பயன்படுத்துகிறது. மதச்சார்பின்மை என்பது அரசு மற்றும் அரசியலில் இருந்து மதத்தை பிரிப்பது என அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால், ராமர் கோவில் திறப்பு விழா அரசியல் சாசனத்தின் கொள்கைக்கு முரணாக மதத்தின் வெளிப்படையான அரசியலை பிரதிபலிக்கிறது. இந்த விழாவை உத்தரப் பிரதேச முதல்வர் உள்பட அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் முன்னிலையில் இந்திய பிரதமர் தொடங்கி வைக்கப் போகிறார். இது, பாஜக அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாக நாங்கள் உணருகிறோம். அரசியல் சாசனத்துடனும் அல்லது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழக்கு பொருந்தாத மாதத்தின் வெளிப்படையான அரசியல் மயமாக்கல் இது. இந்த அரசியல்மயமாக்களை எதிர்ப்பதற்கான வழி, மதச்சார்பின்மையை கடைப்பிடிப்பதே.”
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்: “கட்டி முடிக்கப்படாத கோயிலை அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் திறக்க இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரியாதையுடன் புறக்கணிக்கின்றனர்.”
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்யா: “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை.”
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்: “கோயில் கட்டிடப் பணிகளை முழுமையாக முடிந்த பின்னர் ராமர் கோயிலுக்குச் செல்வேன். குறிப்பாக, 22-ம் தேதி கும்பாபிஷேக விழாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் இருப்பதால், அன்று செல்வதைத் தவிர்ப்பேன்.”
திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி: “மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். பாஜக நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பது கிடையாது” என்றவர், குடமுழுக்கு நாளன்று, ‘சர்ப தர்ம’ என்னும் சர்வ சமய பேரணியை மேற்கு வங்கத்தில் நடத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதில், ‘அனைத்து மதத்தினரும் பங்கேற்க வேண்டும்’ என அழைப்பும் விடுத்திருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்: “எனக்கு அழைப்பு வராததால் பங்கேற்கப் போவதில்லை. பிரம்மாண்ட விழா முடிந்ததும், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அயோத்திக்கு செல்வேன்” என்றார். முறையான அழைப்பிதழ் வரும் என்ற நம்பிக்கையில், 22–ம் தேதி நிகழ்ச்சிகளைப் பட்டியலிடாமல் வைக்குமாறு கெஜ்ரிவால் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மாநாட்டு கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லா: “இந்த விவகாரத்தில் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. நான் போகலாமா வேண்டாமா என்று ஏன் கேட்கிறீர்கள்? என்னை அழைக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அழைக்கப்பட வேண்டியவர்களுக்கு ஏற்கெனவே அழைப்பு வந்துவிட்டது.”
திமுக அமைச்சர் சேகர் பாபு: “அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அவர்கள் செல்வதற்கு உண்டான உதவிகளை செய்ய, இந்து சமய அறநிலைத் துறை தயாராக இருக்கிறது.”
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “ராமர் கோயில் திறப்பிற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை.”
இப்படியாக, பாஜகவுக்கு எதிராக இணைந்திருக்கும் இந்தியக் கூட்டணி கட்சிகள், கடுமையான மற்றும் இரட்டை நிலைப்பாட்டு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT