Published : 18 Jan 2024 09:22 PM
Last Updated : 18 Jan 2024 09:22 PM

மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்கும் முயற்சி: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிதி கமிஷனில் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான பாஜக அரசின் தலையீடு காரணமாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி பெருமளவு குறைவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான தகவலை தங்களிடம் அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ல் நாட்டில் பிரதமர் மோடியின் ஆட்சி அமைந்தது முதலே மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி குறைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் நீண்ட ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “14-வது நிதி கமிஷனில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு சட்டத்துக்கு முரணாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய வரி வருவாயின் பங்கினை களவாடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மோடி அரசின் உயர்மட்ட அதிகாரி மூலம் இந்த விவகாரம் தெரியவந்தது. நிதி கமிஷன் 42 சதவீதத்தை பங்காக வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதைக் காட்டிலும் குறைவான பங்கை வழங்கவே ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால், பிரதமரின் முயற்சி முழுமை பெறாத காரணத்தால் தனது அரசின் முதல் முழு பட்ஜெட்டை 48 மணி நேரத்தில் அவசர அவசரமாக மாற்ற வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. அதனால் மக்கள் நல திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

உண்மையை முற்றிலுமாக மூடி மறைக்க பல லேயர்களை கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அரசின் கணக்கு விவரங்கள் வெளிப்படையாக இருந்தால் ஹிண்டன்பர்க் அறிக்கை கூட தாக்கல் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் இந்தப் புறக்கணிப்பு அப்படியே பிரதமர் மோடி அரசின் அசல் நியதியை வெளிக்காட்டுகிறது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அரசுக்கு சேர வேண்டிய உரிய நிதி மறுக்கப்படுவதில் மனித தவறுகளின் தாக்கம் இருக்கவே செய்கிறது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அரசியல் நீதியை உறுதிப்படுத்தவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும், ‘மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் இந்தியா அதாவது பாரதம்’ என்ற அம்பேத்கரின் அரசியலமைப்பு கூற்றினை நிலைநாட்டவும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x