Published : 18 Jan 2024 06:49 PM
Last Updated : 18 Jan 2024 06:49 PM

‘முதலில் ராகுல்... அப்புறம்தான் க்யூ...’ - நியாய யாத்திரையை ‘மடக்கிய’ அசாம் கிராமத்துப் பெண்கள்!

ஜோர்ஹத்: அசாம் மாநிலத்தில் அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்துக்கான படிவங்களை வாங்க கிராமப்புற பெண்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரை வாகனம் தங்களைக் கடந்து செல்வதைப் பார்த்து, தாங்கள் காத்திருந்த வரிசையை விட்டுவிட்டு ஆர்வமாக ஒடிச் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம் தேதி மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. தற்போது அசாமில் நடந்து வரும் யாத்திரை வியாழக்கிழமை மதியம் அங்குள்ள சிவசாகர் மாவட்டத்தில் இருந்து மரியானி நகரை அடைந்தது. அப்போது அங்கிருக்கும் நாகசாரி என்ற பகுதியில் அரசு திட்டங்களுக்கான விண்ணப்படிவங்கள் வாங்க நூற்றுக்கணக்கான கிராமப்புற பெண்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் தங்களைக் கடந்து செல்வதைக் கண்டதும், தாங்கள் காத்திருந்த வரிசையை விட்டு விலகி ராகுல் காந்தியைச் சந்திக்க சாலைக்கு ஓடிச் சென்றனர்.

இதனிடையே, மக்கள் வருவதைப் பார்த்ததும் ராகுல் காந்தியின் வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டது. தனது பிரச்சாரப் பேருந்திலிருந்து இறங்கி ராகுல் காந்தி வெளியே வந்தார். அப்போது பல பெண்கள் அவரது காலில் விழ முயன்றனர். ராகுல் அதனைத் தடுக்க முயன்றார். பின்னர் பெண்கள் அவருடன் சேர்ந்து படங்கள் எடுக்க முயன்றனர். அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் சிறிது நேரம் செலவளித்து படங்கள் எடுத்துக்கொண்டார். மேலும், தொடர்வதற்கு முன்பாக பெண்களிடம் நலம் விசாரித்தார்.

இது குறித்த வீடியோ பதிவினை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பயணிக்கும் காங்கிரஸின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் 5-வது நாளில் அசாமின் மரியானி நகரில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவுக்காக காத்திருந்த பெண்கள் ராகுல் காந்தியைப் பார்த்ததும் தன்னிச்சையாகவும் உற்சாகமாகவும் அவரைச் சந்திக்க வந்தனர். நியாய யாத்திரை அசாமில் தொடங்கியது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அசாமில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, 40 லட்சம் சுய உதவி குழு உறுப்பினர்களை கிராமப்புற சிறு தொழில்முனைவோராகவும் அவர்களை லக்பதி பைதேவாஸ்களாகவும் மாற்ற உதவும் திட்டத்துக்கான படிவங்களை ஜன.18-ம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கான படிவங்களை முக்கிய மந்திரி மகிளா உதியமிதா அபியான் பயனாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் சென்று பெற்றுக்கொள்ளலாம், ஜெராக்ஸ் காப்பி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, மாநில அரசு ராகுல் காந்தியின் யாத்திரையில் குறுக்கிடும் வகையில் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கும் தேதிகளை அறிவித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சாய்கியா, மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், "ராகுல் காந்தியின் யாத்திரை அசாமில் தொடங்கும் வியாழக்கிழமையில் அரசு தனது திட்டத்துக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக யாத்திரை தொடங்கும் தனது மாவட்டமான சிவசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஜன.18-ம் தேதி விண்ணப்பபடிவங்கள் விநியோகிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் கடந்த 2023-ல் ஜன. 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். அப்போது தமிழகம், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் 150 நாட்களில் 4,080 கி.மீ. தொலைவு அவர் பாத யாத்திரை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரிலிருந்து இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் ஜன.14-ம் தேதி தொடங்கினார்.

மணிப்பூர், நாகாலாந்து, அசாம்,அருணாச்சல், மேகாலயா, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர்,உ.பி., ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் 66 நாட்களில் 6,713 கி.மீ. தொலைவுக்கு அவர் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். வரும் மார்ச் 20-ம் தேதி மும்பையில் தனது யாத்திரையை நிறைவு செய்கிறார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது. இந்த யாத்திரை ஜன.25-ம் தேதி வரை அசாமின் 17 மாவட்டங்கள் வழியாக 833 கி.மீ. தூரம் பயணிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x