Published : 18 Jan 2024 06:27 AM
Last Updated : 18 Jan 2024 06:27 AM
புதுடெல்லி: அயோத்தியில் இருந்து பெங்களூரு மற்றும் கொல்கத்தாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார்.
அயோத்தியில் கட்டப்படும் பிரம்மாண்ட ராமர் கோயில் வரும் 22-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.திறப்பு விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அயோத்தியில் இருந்து பெங்களூருவுக்கும் அயோத்தியில் இருந்து கொல்கத்தாவுக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நேற்று தொடங்கப்பட்டது.
இந்த விமான சேவையை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யசிந்தியா டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். கொல்கத்தா - அயோத்தி இடையிலான முதல் விமானத்திற்கான பயண டிக்கெட்டை லக்னோவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையில் உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
உத்தரபிரதேச மக்கள் தொகையை பார்த்தால், அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இங்கு உள்ளனர். இதுபோல் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் பாதி பேர் உத்தரபிரதேசத்தில் உள்ளனர். கடந்த நவம்பரில் நாம் தீபாவளி கொண்டாடினோம், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான டிசம்பர் 3-ம் தேதி, நமக்கு இரண்டாவது தீபாவளியாக இருந்தது. வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் அல்ல, உலகம் முழுவதும் மூன்றாவது தீபாவளி கொண்டாடப்பட உள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, “கடந்த9 ஆண்டுகளில், உத்தர பிரதேசத்தில் புதிய விமான நிலையங்கள் மட்டும் வரவில்லை. 4 சர்வதேச விமான நிலையங்களுடன், விமான இணைப்பு துறையில் ஒரு முக்கிய மாநிலமாக உத்தரபிரதேசம் மாறியுள்ளது” என்றார்.
அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த நவீன விமான நிலையம் ரூ.1,450 கோடிக்கும் மேற்பட்ட செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT