Published : 17 Jan 2024 07:14 PM
Last Updated : 17 Jan 2024 07:14 PM
புதுடெல்லி: அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் நாளை (வியாழக்கிழமை) கருவறைக்குள் கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளதாக ஸ்ரீராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான பூஜைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிராண பிரதிஷ்டை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரபேந்திர மிஸ்ரா, "ஜனவரி 22-ம் தேதி நண்பகல் 12.30 மணிதான், பிராண பிரதிஷ்டை செய்வதற்கான முகூர்த்தம். இதற்கான வழிபாடுகள், சடங்குகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
குழந்தை ராமர் விக்ரகம் நாளை காலை கருவறைக்குள் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அப்போது, சிலைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்படும். மற்ற சடங்குகளும் மேற்கொள்ளப்படும். ராமர் சிலைக்கு மட்டுமல்லாது, கோயிலில் உள்ள வேறு தெய்வச் சிலைகளுக்கும் இந்தச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறுதியாக, புனிதமான நேரம் வரக்கூடிய, வரும் 22-ம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்படும்" என தெரிவித்தார்.
முன்னதாக, பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு வெள்ளியால் ஆன உற்சவ ராமர் கோயில் வளாகத்தில் இன்று ஊர்வலமாக வந்தார். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் குழந்தை ராமர் ஊர்வலமாக வந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறிய எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருவறையில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலை கருப்பு நிற கல்லால் செய்யப்பட்டது. கர்நாடகாவின் மைசூறு நகரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் இந்த சிலையை வடித்துள்ளார். கருவறையில் நிறுவ மூன்று சிலைகள் வடிக்கப்பட்ட நிலையில், அவற்றில் இருந்து அருண் யோகிராஜ் வடித்த சிலை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலை பக்தர்களோடு பேசுவதுபோல் உயிர்ப்புடன் வடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT