Published : 17 Jan 2024 04:29 PM
Last Updated : 17 Jan 2024 04:29 PM

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: “வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. அதனால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் இந்த நடவடிக்கைகளை ஏன் மனுதாரர்கள் எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஜன.17) நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இருந்தாலும் வெறுப்புப் பேச்சு இன்னும் முற்றிலுமாக தடுக்கப்படவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், பல நேரங்களில் தண்டனை வழங்க வேண்டிய காவல் துறையினர் மவுனிகளாக வேடிக்கை பார்க்கின்றனர். இது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக முன்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுகளால் களத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் நடவடிக்கைகளை எதிர்மறை கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்?” என்று வினவினர்.

அதற்கு கபில் சிபல், “நாங்கள் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்தைப் பற்றி வருந்துகிறோம். ஜனவரி 3-ஆம் தேதி மகாராஷ்டிராவின் சோலாபூர் நகரில் முஸ்லிம்களை குறிவைத்து வெளிப்படையாகவே வெறுப்புப் பேச்சுக்கள் உதிர்க்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியை நடத்திய அதே அமைப்பு ஜனவரி 7-ஆம் தேதியும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இந்து ராஷ்டிரம் (இந்து தேசம்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வெறுப்புப் பிரச்சாரம் செய்தது. முஸ்லிம்கள் லவ் ஜிகாத்தில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

இந்து ஜனஜாகுரிதி சமிதி அமைப்பானது வரும் 18-ஆம் தேதி மகாராஷ்டிராவின் யவதமாலில் பொது நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பு பலமுறை வெறுப்புப் பேச்சுகளை கட்டவிழ்த்துள்ளது. அதேபோல், டி.ராஜா சிங் என்ற பாஜக எம்எல்ஏ வரும் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சத்தீஸ்கரில் பல்வேறு பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இவர் மீது பல்வேறு வெறுப்புப் பிரச்சார வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்றார்.

இந்நிலையில், மனுதாரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின்போது அந்தந்த மாவட்ட காவல் துறை வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பாக தீவிர கண்காணிப்பை செலுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. தேவைப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிக்கவும் என்றும் கூறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x