Published : 17 Jan 2024 06:41 AM
Last Updated : 17 Jan 2024 06:41 AM
பெனுகொண்டா: கடந்த 9 ஆண்டுகளில் மட்டும், நமது நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் ‘நாசின்’ பயிற்சி மையத்தை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், பெனுகொண்டாவில் 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.545 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதை தடுப்பு அகாடமி மையத்தை (நாசின்) நேற்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசியதாவது: பின் தங்கிய சத்யசாய் மாவட்டத்தில் நாசின் ஏற்பாடு செய்துள்ளோம். இது முக்கிய பயிற்சி மையமாக மாற உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முசோரியும், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஹைதராபாத்தும் உள்ளதை போன்று, ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஜிஎஸ்டி வழியாக நவீன வரி வசூலை கொண்டு வந்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வருமான வரி இலக்கு அதிகரித் தோம். ஆண்டு தோறும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நாட்டில் அடிப்படை வசதிகளை அதிகரித்து வருகிறோம்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஏழைகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதே ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டும். இதேபோன்று பல திட்டங்கள் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையும் மேம்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘நாசின் நாட்டிலேயே மிக முக்கியமான பயிற்சி மையமாகும். வருவாய் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். உலக சுங்கவரி அமைப்பு கூட நாசினுக்கு உரிய அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக ஆந்திர மாநில அரசு 500 ஏக்கர் நிலத்தை வழங்கியது’’ என்றார். விழாவில் ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT