Published : 16 Jan 2024 05:15 PM
Last Updated : 16 Jan 2024 05:15 PM
டெல்லி: டெல்லியில் உள்ள பாலாஜி கோயிலில் நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயண நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மனைவியுடன் பங்கேற்றார்.
டெல்லியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோயிலில் நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் பங்கேற்றார். இந்த பாராயண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு இசைக் கருவிகள் இசைக்க சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது. அப்போது, அரவிந்த் கேஜ்ரிவாலும் பக்தர்களோடு இணைந்து சுந்தரகாண்ட பாடல்களைப் பாடினார்.
முன்னதாக, நேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "அனைவரின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பல இடங்களில் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. நான், என் மனைவியுடன் ரோகிணி கோயிலில் நடைபெற உள்ள சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்க இருக்கிறேன். உங்கள் வசதிக்கேற்ப உங்கள் வீட்டிற்கு அருகில் நடைபெறும் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், "அனுமனின் ஆசியோடு டெல்லியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த முக்கிய பணிக்கு பகவான் ஆஞ்சநேயர் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இனி ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
வரும் காலங்களில் 2,600 இடங்களில் சுந்தரகாண்டமும், அனுமன் சாலிசாவும் பாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ராமரின் பெயரைப் பயன்படுத்துவதையும், அனுமன் மீது பக்தி செலுத்துவதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அயோத்தி ராமர் கோயில் குறித்து நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது எங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி மற்றும் பெருமைக்குரிய ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT