Published : 16 Jan 2024 03:00 PM
Last Updated : 16 Jan 2024 03:00 PM

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியை சமீபத்தில் சந்தித்த ஒய்.எஸ்.ஷர்மிளா

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து பதவியை ராஜினாமா செய்துள்ள கிடுகு ருத்ர ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிறப்பாக பணியாற்றிய கிடுகு ருத்ர ராஜுவை கட்சி பாராட்டுகிறது" என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, கடந்த 4-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, தனது கட்சியையும் காங்கிரஸோடு இணைத்துவிட்டதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நகர்வுகளை அடுத்து, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகின. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, "காங்கிரஸ் கட்சி எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்று செயல்படுவேன். அவர்கள் என்னை அந்தமான் நிகோபார் தீவில் பணியாற்றுமாறு பணித்தாலும் அதை ஏற்பேன்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி உள்ளார். அவரது சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைவராக களமிறங்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x