Published : 15 Jan 2024 06:07 AM
Last Updated : 15 Jan 2024 06:07 AM
ஹைதராபாத்: அயோத்தியில் எங்கு திரும்பினாலும், மிக அழகாக, நவீன தொழில்நுட்ப முறையில் ராமரின் அவதாரம் முதற்கொண்டு பட்டாபிஷேகம் வரை முக்கிய படலங்கள் சிற்பமாக நம் கண் முன் காட்சி அளிக்கிறது.
இந்த வகை சித்திரங்களை தீட்டி கொடுத்து, பல விருதுகளுக்கு சொந்தகாரரான ஓவியர் ராஜேஷ் நாகுலகொண்டா அவர்கள் ‘இந்து தமிழ் திசை’க்காக தமது அற்புதமான ஓவியங்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவை உங்களுக்காக:
ஓவியரானது எப்படி? ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சீராலா எனது சொந்த ஊர்.நகை செய்வது எங்களின் பரம்பரைத்தொழில். ஆனால் எனக்கு ஓவியத்தில்தான் அதிக நாட்டம் இருந்தது. இதனால், சிறு வயதில் ’சந்தமாமா’ எனும் சிறுவர் புத்தகத்திற்கு படங்கள்வரைந்தேன். எனது ஓவிய கலையின் நாட்டத்தை அறிந்து எனது குடும்பத்தாரும் ஒத்துழைத்தனர்.
ஹார்ட் அனிமேஷனினில் இருந்து கலர் சிப்ஸ் எனும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த பிறகுதான் பிரபஞ்சஅளவிலான ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.இதனால் எனக்கென ஒரு தனி பாணியைஉருவாக்கி கொண்டேன். பல பத்திரிகைகளுக்கு ஓவியராகவும் பணியாற்றினேன். குறிப்பாக, சென்னையில் சந்தமாமா பத்திரிக்கையில் 5 ஆண்டுகள் வரை பணியாற்றினேன்.
உங்களின் தனி திறமை என்ன? ஒரு படத்தை வரைந்தால் அதனைபார்க்கும் நபரின் மனதிற்குள் அது ஆழமாக பதிய வேண்டும். இதனை ஆங்கிலத்தில் ‘இல்லஸ்டிரேஷன்’ எனகூறுவார்கள். அதுபோன்ற படங்களை பார்க்கும் போதுதான் ஒரு ஓவியர் அந்த சித்திரத்தை உருவாக்க எவ்வளவு கடினமாக உழைப்பை தந்துள்ளார் என்பதை உணர முடியும்.
நீங்கள் பெற்ற விருதுகள்? புகழ்பெற்ற ‘காமிக் கான்’, பெஸ்ட்பென்சிலர்’ உட்பட 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளேன். கிராபிக் புத்தகங்கள் சுமார் 120 வரை செய்துள்ளேன். சிறுவர்கள் படித்தால் உடனடியாக புரியும் வகையில் பால பகவத்கீதைக்கு கிராபிக் ஓவியம் தீட்டியுள்ளேன். இதேபோன்று யோகா மீதும் ஓவியங்கள் தீட்டியுள்ளேன்.
திருச்சானூர் பத்மாவதி தாயார்கோயில் வெள்ளிக்கிழமை தோட்டத்தில் உங்கள் ஓவியம் பக்தர்களை கவர்ந்து வருகிறது. ஸ்கேன் செய்தால், அந்த ஓவியம் குறித்த கதை செல்போனில் வருகிறது. எப்படி இந்த யோசனை வந்தது?
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வெள்ளிக்கிழமை தோட்டத்தில்தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அக்கோயிலின் தல புராணத்தை வடிவமைக்க எனக்கு அழைப்பு வந்தது. இதனை ஏற்று,தாயாரின் பிறப்பு முதல், ஏழுமலையானுடன் திருக்கல்யாணம் வரை அனைத்தும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. செல்போனில் கியூஆர் கோடைஸ்கேன் செய்தால், ஓவியங்களுடன் கதையாக வரும்.
விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயிலிலும் இதேபோன்று ஓவியம் வரைய கேட்டுக்கொண்டனர். அங்கும் ஓவியங்கள் வரையப்பட்டு ஸ்கேன் செய்தால் அதற்கான கதையும் வரும்படி செய்துள்ளேன்.
அயோத்தியில் எங்கு திரும்பினாலும் உங்களின் மாறுபட்ட ‘டெரகோட்டா’ ஓவியங்கள் காந்தம் போல் இழுப்பதாக கூறப்படுகிறதே? அது எனது பூர்வ ஜென்ம பாக்கியம். அயோத்தியில் இதற்கான வேலைகளை நான் சுமார் 20 ஆண்டுகளாக செய்து வருகிறேன். ராமாயணத்தை ராமர் பிறப்பு முதல், வனவாசம், சீதை அபகரிப்பு, அனுமன் நட்பு, ராவண யுத்தம், ராவண வதம், பட்டாபிஷேகம் என ராமாயணத்தில் உள்ள முக்கிய கட்டங்களை டெரகோட்டா ஓவியங்களில் பிரதிபலித்துள்ளேன்.
டெரகோட்டா ஓவியங்கள் என்பது முதலில் நாம் என்ன நினைக்கிறோமோ அதனை ஓவியமாக தீட்டிக்கொள்ள வேண்டும். நாம் எத்தனை பெரிய அளவாக அந்த ஓவியத்தை சுவற்றில் பதிக்க வேண்டுமோ, அந்த அளவில், தரையில் களிமண்ணால் அதே ஓவியத்தை காப்பி செய்து, காய வைத்து, பின்னர் களிமண்ணை நெருப்பினால் சுட்டு அவைகளை தனித் தனியாக வெட்டி எடுத்து மீண்டும் சுவற்றில் பதிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த களிமண் ஓவியத்தின் மீது வர்ணங்கள் பூச வேண்டும். இது போல் அயோத்திக்கு 200 ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளேன். அது தற்போது அயோத்தி நகரம் முழுவதும் கோயில் முகப்பிலிருந்து ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் 20 அடி உயரத்திற்கு 10 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜேஷ் நாகுலகொண்டா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT