Published : 14 Jan 2024 12:52 PM
Last Updated : 14 Jan 2024 12:52 PM

ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்

மிலிந்த் தியோரா | படம் இம்மானுயேல் யோகினி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். மேலும் அவர், காங்கிரஸ் கட்சி உடனான தனது குடும்பத்தின் 55 ஆண்டு கால உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் இருந்து இன்று தொடங்க உள்ள நிலையில் மிலிந்த்-ன் இந்த ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது.

மாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் மிலிந்த் தியோரா இணையப்போகிறார் என்ற செய்தி குறித்து செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, அதனை வதந்தி என நிராகரித்த மிலிந்த் தியோரா இன்று தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மிலிந்த் தியோரா எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "தியோரா எந்த தருணத்தில் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவை லோக் கல்யாண் மார்க்-கில் இருப்பவர்(அதாவது பிரதமர் மோடி) முடிவு செய்துள்ளார். எந்த தருணத்தில் தியோரா கட்சியில் இருந்து வெளியேறினால் அது தலைப்புச் செய்தியாகும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.

மும்பை தெற்கு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான மிலிந்த் தியோரா, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அந்த தொகுதியை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கேட்பது தொடர்பாக தனது அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எனது ஆதராவளர்களிடம் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார். மும்பை தெற்கு தொகுதி தொடர்பாக காங்கிரஸ் - சிவ சேனா(உத்தவ் தாக்கரே அணி ) இடையே மோதல் வெடித்த நிலையில், மிலிந்த் தியோரா காங்கிரஸில் இருந்து விலகி உள்ளார். மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட மிலிந்த் தியோரா விருப்பமாக இருப்பதால் அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணையலாம் என்ற ஊகம் நிலவுகிறது. தெற்கு மும்பை தொகுதி தற்போது, உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் அரவிந்த் ஸ்வாந்த் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x