Published : 14 Jan 2024 05:40 AM
Last Updated : 14 Jan 2024 05:40 AM
புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் தலைவராக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மறுத்துவிட்டார்.
பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆளும் பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இண்டியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் கூடி ஆலோசனை நடத்தினர். ஆனால், கூட்டணியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள், தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்களில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில், ‘இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை தேர்வு செய்ய வேண்டும். தொகுதி பங்கீட்டை ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர். சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இண்டியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்க பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
‘‘இண்டியா கூட்டணி பதவிகளில் எனக்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாராவது ஒருவர் ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கலாம்’’ என்று அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையின்போது, இண்டியா கூட்டணியின் தலைவராக கார்கே நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. இண்டியா கூட்டணியில் தலைவர் பதவி வேறு, ஒருங்கிணைப்பாளர் பதவி வேறு என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சித் தலைவர் (உத்தவ் பிரிவு) உத்தவ் தாக்கரே ஆகியோர் நேற்று நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT