Published : 13 Jan 2024 04:58 PM
Last Updated : 13 Jan 2024 04:58 PM

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே அழைப்பு

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் நாளை தொடங்க உள்ளது. தலைநகர் இம்பாலில் தொடங்குவதாக இந்த யாத்திரை, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக தவ்பால் நகரில் உள்ள தனியார் மைதானத்தில் தொடங்க உள்ளது. மணிப்பூரில் தொடங்க உள்ள இந்த யாத்திரை இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை உள்ள பல்வேறு மாநிலங்கள் வழியாகப் பயணித்து மும்பையை வந்தடைய இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த யாத்திரை முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில், இந்த யாத்திரையில் இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இண்டியா கூட்டணியின் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஆக்கப்பூர்வமான முறையில் ஆன்லைனில் நடந்தது. தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறிச் செல்வதில் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதோடு, வரும் காலங்களில் இணைந்து பிரச்சாரங்களில் ஈடுபடுவது தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம்.

இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க நானும், ராகுல் காந்தியும் அழைப்பு விடுத்துள்ளோம். நாட்டு மக்களை பாதித்து வரும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மேடையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் கூட்டத்தில், கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கேவும், ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இண்டியா கூட்டணி இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x