Published : 13 Jan 2024 01:26 PM
Last Updated : 13 Jan 2024 01:26 PM

“அனைத்தும் சாஸ்திரப்படியே நடக்கிறது” - அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் விளக்கம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் சாஸ்திரப்படியே நடத்தப்படுவதாக கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகரான ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், "அனைத்தும் சாஸ்திரப்படியே நடக்கின்றன. விழாவில் பங்கேற்காததற்காக அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) ஏதேதோ சொல்கிறார்கள்" என்று கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தக் கூடாது என்றும், சாஸ்திரப்படி கும்பாபிஷேகம் நடைபெறாது என்பதால் தாங்கள் அதில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் சங்கராச்சாரியார்கள் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், "சங்கராச்சாரியார்களின் கருத்து குறித்தும், அவர்களின் எண்ணம் குறித்தும் நாங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம். எனவே, அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

ராமர் கோயில் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ராஜநீதி, தர்மநீதி என இரண்டு இருக்கிறது. ராமர் கோயிலை அவர்கள் (பாஜக) கட்டி இருக்கிறார்கள். அதற்கான ஆசீர்வாதத்தை இன்று அவர்கள் பெறுகிறார்கள். இது ராஜநீதி கிடையாது; ஆனால் தர்மநீதி" என்று குறிப்பிட்டார்.

குழந்தை ராமர் சிலையை அவர் பிறந்த இடத்தில் நிறுவுவதற்கு இதற்கு முன் வேறு அரசியல் கட்சி ஏதேனும் முயன்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “இதற்கு முன் அப்படி யாரும் முயற்சிக்கவில்லை” என கூறினார்.

மேற்கு வங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், “சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காவி வண்ணத்தைக் கண்டாலே கோபம் வருகிறது. மம்தா பானர்ஜிக்கு சிலர் மும்தாஜ் கான் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பும் ராம நவமி ஊர்வலத்தின்போதும், பிற ஆன்மிக ஊர்வலங்களின்போதும் தாக்குதல் நடந்திருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகள், விமர்சனங்கள் ஏன்? - உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் ஜனவரி 22-ல் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. முழுவதுமாக கட்டி முடிந்த, கோயிலின் தரைதளத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அப்போது கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட காங்கிரஸ் கட்சி, “ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்டுமானப் பணி முழுமையாக முடியாத நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக கோயில் திறப்பு விழாவை நடத்துகின்றனர். இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என தெளிவாக தெரிவதால், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை என்றும், இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் பூரி சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி கருவறையில் இருந்து சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வார். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது. அதாவது இந்த நிகழ்வுக்கு ஏதோ ஓர் அரசியல் கோணம் கொடுக்கப்படுகிறது. கண்ணியமான முறையில் இந்த நிகழ்வு நடத்தப்பட வேண்டும். நான் அதை எதிர்க்கவும் இல்லை; அதில் கலந்து கொள்ளவும் மாட்டேன். நான் எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன், அனைத்து நிகழ்வுகளும் சுமுகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

அரசியல் கட்சிகள் பார்வை: அரசியல் லாபத்துக்காக ராமர் கோயில் திறப்பை பாஜக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “அரசியல் லாபத்துக்காக ராமர் கோயில் திறப்பை பாஜக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது. மக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் நிதிகளை தனது தனிப்பட்ட சேவை மூலம் மக்களுக்கு வழங்குவதைப் போல் பிரதமர் மோடி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, “நான் ராமர் கோயிலுக்கு செல்வதற்கு யாரும் அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது கோயிலுக்கு சென்று வழிபடுவேன். இது நம்பிக்கை தொடர்பானது. மதம் தொடர்புடைய உணர்ச்சிகரமான ராமர் கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் தவறானதாகும்” என்றார்.

பாஜக பதிலடி: அதேவேளையில், “பகவான் ராமர் மீது எதிர்க்கட்சிகளுக்கு என்ன பகை என்பது புரியவில்லை. அயோத்தி ராமர் கோயில் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் பாபர், அப்சல் குருவை வழிபட தயாராக இருப்பதாகவே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்” என்று மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியுள்ளார்.

சங் பரிவார் திட்டம்: ராமர் கோயில் பற்றிய பரபரப்பு கும்பாபிஷேகத்துடன் முடிந்து விடாமல், அதற்கு பின்பு தொடர்வதற்கான திட்டங்களை செய்ய சங் பரிவார் திட்டமிட்டுள்ளது. அதன் முழு விவரம்: அயோத்தி ராமர் கோயில் சுற்றுலாவுக்கு ஜன. 27-ம் தேதி முதல் சங் பரிவார் ஏற்பாடு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x