Published : 13 Jan 2024 01:19 PM
Last Updated : 13 Jan 2024 01:19 PM

அயோத்தி இளவரசியின் நினைவுச் சின்னத்தை காண தென் கொரிய சுற்றுலா பயணிகள் ஆர்வம்: ரகசியம் என்ன? 

புதுடெல்லி: ராமர் பிறந்ததாகக் கூறப்படும் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகருக்கும் தென் கொரியாவுக்கும் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது. ஆனால் அது ராமருடன் சம்மந்தப்பட்டது இல்லை. அங்குள்ள ராணி ஹு ஹ்வாங் ஓக்-க்கு அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தென்கொரிய சுற்றுலா பயணிகள் அயோத்திக்கு வருகின்றனர். தங்களின் ஆதித் தொடர்பு அயோத்தில் இருப்பதாக தென் கொரியர்கள் நம்புகின்றனர்.

யார் இந்த ராணி ஹு ஹ்வாங் ஓக்?: சூரிரத்னா என்று அறியப்பட்ட ராணி ஹு ஹ்வாங் ஓக் அயோத்தியின் இளவரசியாக இருந்தவர். இவர் கி.பி. 48-ல் கொரியா மற்றும் காராக் குலத்தின் அரசர் கிம் சுரோவை மணந்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. டாக்டர் உதய் தோர்கா ஆய்வின்படி, பண்டைய கொரிய நூலான ‘சம்குக் யூசா’ மன்னன் சுரோவின் மனைவி அயூதா என்று அழைக்கப்படும் தொலைதூர தேசத்தின் இளவரசி என விவரிப்பதாக கூறுகின்றது.

அயோத்தியிலிருந்து கொரியாவுக்கு படகு பயணம்: உத்தரப் பிரதேச அரசின் இணையதளத்தின் படி, அயோத்தி இளவரசி சூரிரத்னா அங்கிருந்து படகு மூலமாக கொரியாவுக்கு பயணித்ததாக நம்பப்படுகிறது. திருமணமாகும் போது இளவரசிக்கு வயது 16. இவர் தான் மன்னர் சுரோவின் முதல் ராணி எனவும் நம்பப்படுகிறது. சில சீன நூல்களின் படி, அயோத்தி மன்னனின் கனவில் வந்த கடவுள், அவரது 16 வயது மகளை தென்கொரிய அரசர் கிம் சுரோவுக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. அரசனுக்கும் அரசிக்கும் 10 மகன்கள் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் 150 வருடங்கள் வாழ்ந்ததாகவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கான அப்போதைய தென்கொரிய தூதர் ஷின் போங்க் கில்,“அயோத்திக்கு கொரியாவுடன் முக்கிய தொடர்பு உள்ளது. அயோத்தியின் இளவரசி கொரிய அரசரை மணந்து கொண்டதாக கொரிய நூல்கள் தெரிவிக்கின்றன. அரசர் கிம் சுரோவின் கல்லறையில் இருந்து கிடைத்த தொல்பொருள்களில் அயோத்திக்கு சொந்தமான கலைபொருள்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

அயோத்தியில் ஹு ஹ்வாங் ஓக்-க்கு நினைவிடம்: தென்கொரிய ராணி ஹு ஹ்வாங் ஓக் -க்கு கடந்த 2001-ம் ஆண்டு அயோத்தியில் நினைவிடம் உருவாக்கப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தென்கொரிய பயணத்தின் போது, அந்நினைவிடத்தை விரிவாக்கம் செய்வதற்காக பிரதமர் மோடிக்கும் அப்போதைய தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்-க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் ராணியின் பாரம்பரியத்தை பெருமைபடுத்தும் வண்ணம் நினைவுச்சின்னம் அழகுபடுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு நினைவுச் சின்னப்பூங்கா திறக்கப்பட்டது. அதே போல் கடந்த 2019-ம் ஆண்டு ராணியின் நினைவாக இந்திய அரசு ரூ.5 மற்றும் ரூ.25-க்கு தபால் தலைகள் வெளியிட்டன. உத்தரப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலா இணையதளத்தின் படி, சுமார் 60 லட்சம் காராக் இனமக்கள் அயோத்தியை தங்களின் பூர்வீகமாக கருதுகின்றனர்.

இந்த நினைவுச் சின்னப் பூங்காவில் இளவரசி சூரிரத்னாவின் அயோத்தி - கொரிய பயணம் விவரிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கல்லில் இந்த பயணக் கதை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னப் பூங்கா ரூ.21 கோடி செலவில் சராயூ நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் தென்கிழக்கு மூலையில் ராணி ஹு ஹ்வாங் ஓக்-ன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மூலையில் மன்னர் கிம் சுரோவின் சிலை உள்ளது. பூங்காவில் குளம் மற்றும் நடைபாலத்தின் உதவியுடன் இளவரசியின் கடல் பயணம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் கிரானைட் கல்லில் செய்யப்பட்ட ஒரு முட்டை உள்ளது. இளவரசி சூரிரத்னா கொரியா செல்லும் போது தன்னுடன் ஒரு தங்க முட்டையை எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.

ஹு ஹ்வாங் ஓக்-ன் தமிழ் தொடர்பு?: ஓய்வு பெற்ற பேராசிரியரும் கொரியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியின் முன்னாள் அறிவியல் ஆலோசகரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கண்ணன் நாராயணன் ராணி குறித்து மற்றொரு கருதுகோளை முன்வைக்கிறார். சீனப் புராணங்களை அடிப்படையாக கொண்ட அவரின் கோட்பாட்டின் படி, கண்ணன் நாராயணன், ராணியின் பெயர் தென்னிந்தியாவின் பாண்டிய பேரரசைக் குறிக்கிறது என்கிறார். மேலும் அவர், அயோத்தியின் சுவர்களில் கிடைத்த இரட்டை மீன் சின்னம் அந்த காலத்தில் அவை பாண்டியர்களுடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், ராணி தமிழ்நாட்டின் ஆதியூத்து துறைமுகத்தில் இருந்து கொரியா சென்றிருக்கலாம். காலப்போக்கில் அது அயூதா என்று மாறியிருக்கலாம் என்றும் கூறுகிறார். இரட்டை மீன் என்பது பாண்டியர்களின் அரச சின்னம் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x