Published : 13 Jan 2024 01:05 PM
Last Updated : 13 Jan 2024 01:05 PM

குருகிராம் | மாடல் அழகி திவ்யா பகுஜா உடல் ஹரியாணா கால்வாயில் கண்டெடுப்பு

குருகிராம்: ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகியின் உடல் ஹரியாணா கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. பஞ்சாபில் உள்ள பக்ரா கால்வாயில் வீசப்பட்ட சடலம் அண்டை மாநிலமான ஹரியாணாவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கைப்பற்ற உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பகுஜா கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பால்ராஜ் கில் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பகுஜா உடல் மீட்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு குற்றவாளியான ரவி பங்கா இன்னும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

யார் இந்த திவ்யா பகுஜா?: 2005 -2014 காலகட்டத்தில், ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் சந்தீப் கடோலி. இவரை ஹரியாணா போலீஸார் வலைவீசி தேடிவந்தனர். அந்த சமயத்தில், மாடல் அழகியாகும் முயற்சியில் இருந்த திவ்யா பகுஜாவுக்கு (27) சந்தீப் கடோலியுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசிக்க ஆரம்பித்தனர். கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் இடையே சண்டை ஏற்படத் தொடங்கியது. இந்த சண்டையை வாய்ப்பாக பயன்படுத்தி, திவ்யா மூலம் சந்தீப் கடோலியை பிடிக்க குருகிராம் போலீஸ் திட்டமிட்டது.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் ஒரு ஹோட்டல் அறையில் சந்தீப் கடோலி கொல்லப்பட்டார். அப்போது அந்த அறையில் திவ்யா பகுஜாவும் இருந்துள்ளார். சந்தீப் கடோலி போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த என்கவுன்ட்டர் வழக்கில் திவ்யா பகுஜா, அவரது தாயார் மற்றும் 5 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திவ்யா பகுஜா ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தான் திவ்யா பகுஜா இம்மாதம் 2ம் தேதி குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொல்லப்பட்டார். இவரது உடலை இரண்டு ஆண்கள் அந்த ஹோட்டலில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. இக்கொலை தொடர்பாக அந்த ஹோட்டலின் உரிமையாளர் அபிஜித் சிங் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். திவ்யாவின் உடலை அபிஜித் சிங்கின் பிஎம்டபிள்யூ காரில் ஏற்றிச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அவரது உடலை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.

கொலைதொடர்பாக கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அபிஜித் சிங்கின் ஆபாச வீடியோக்கள் திவ்யா பகுஜா வசம் இருந்ததாகவும், அதை வைத்து மிரட்டியதால் அபிஜித் சிங் அவரைக் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திவ்யாவின் உடலை அப்புறப்படுத்த அபிஜித் சிங் தன்னுடைய கூட்டாளிக்கு ரூ.10 லட்சம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x