Published : 13 Jan 2024 07:23 AM
Last Updated : 13 Jan 2024 07:23 AM
பாலசூர்: புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
அதிவேகத்தில் வரும் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை வானில் இடைமறித்து அழிக்க, புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இதன்சோதனை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் (ஐடிஆர்) நேற்று மேற்கொள்ளப்பட்டது.
குறைந்த உயரத்தில் அதிவேகத் தில் பறந்து வந்த ஆளில்லா விமானத்தை, ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது. இந்த பரிசோதனை மூலம் ஆகாஷ் என்.ஜி.ஏவுகணை, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண்கருவி, ஏவுதளம், ரேடார்,கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்புகருவிகளின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன. பல ரேடார்களில் பதிவான தரவுகள், டெலிமெட்ரி, எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள் மூலமும் ஆகாஷ் ஏவுகணையின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ, விமானப்படை, பாரத்டைனமிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் அதிகாரிகளும் பார்வையிட்டனர். ஆகாஷ் என்.ஜி ஏவுகணை சோதனை வெற்றிக்காக டிஆர்டிஓ, விமானப்படை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை உருவாக்கியுள்ளது, நாட்டின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT