Published : 12 Jan 2024 05:02 PM
Last Updated : 12 Jan 2024 05:02 PM
புதுடெல்லி: முசாபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் மாணவரை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்த சம்பவம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசை நேரடியாக கண்டித்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வு, "எதிர்பார்ப்புகளை அரசு நிறைவேற்றாததால் இவை எல்லாம் நடக்கிறது. இந்தச் சம்பவம் நடந்த விதம் குறித்து அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்" என்று உத்தரப் பிரதேச மாநில அரசு வழக்கறிஞரிடம் கண்டனத்தை தெரிவித்தது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "அது தனியார் பள்ளி" என்று கூறினார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த சமூக செயல்பாட்டாளர் துஷார் காந்தியின் வழக்கறிஞர் சதான் ஃபராசத்திடம் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸின் அறிக்கையை வாசித்து, குழந்தையின் பெற்றோரிடம் கலந்தாலோசித்து தேவைப்பட்டால் பரிந்துரைகள் வழங்கும்படி நீதிபதி கூறினார். அப்போது அந்த அறிக்கை போதுமானதாக இல்லை என்று துஷார் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குழந்தையின் வகுப்புத் தோழர்களுக்கான ஆலோசனையில் தலையிட்டு உதவுமாறு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிர்வாகத்திடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதனிடையே, கடந்த விசாரணையின்போது இந்தச் சம்பவம் மிகவும் தீவிரமானது என்றும், இது அரசியல் சாசன பிரிவு 21A (குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விக்கான அடிப்படை உரிமை), கல்வி கற்பதற்கான உரிமை சட்டம் மற்றும் உத்தரப் பிரதேச அரசின் விதிகளை நேரடியாக மீறுகிறது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது. மேலும், வகுப்பறைகளில் மாணவர்கள் எந்தவிதமான பாகுபாட்டினையும் எதிர்கொள்ளவில்லை என்பதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையின்போது, வீடியோவில் பள்ளிக் குழந்தை மீது மதப் பாகுபாடு காட்டும் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய தாமதமானது குறித்து மாநில அரசினை உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது. அப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கல்வியின் தரம் மற்றும் மத பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியது. "அந்தச் சம்பவம் நடந்த விதம் மாநிலத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச காவல் துறை மிகவும் தாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளது. அதிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் திரிப்தி தியாகி. மாணவர் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை கூறியதாக மாணவரின் தந்தைக் கூறியதை தவிர்த்தும் உள்ளது” என்றும் நீதிபதி ஓகா சுட்டிக்காட்டினார்.
உத்தரப் பிரதேச மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத் கூறுகையில், "மாணவர் தற்போது படித்து வரும் பள்ளி அவர் இருக்கும் இடத்தில் இருந்து 28 கி.மீ. தள்ளியிருக்கிறது. கட்டாய இலவச கல்விச் சட்டம், மாணவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் சதான் ஃபராசத், அந்தச் சுற்றளவுக்குள் இந்தப் பள்ளியால் தான் மாணவர் காயப்படுத்தப்பட்டார். மாணவர் தற்போது படிக்கும் பள்ளியில் பாடத்திட்டம் நன்றாக இருப்பதாகவும், அவரின் தந்தையே தினமும் அவரை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சமூக செயல்பாட்டாளர் காந்தி தனது மனுவில், "சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட குழநந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை பள்ளிக்கூடங்களுக்கு தடுப்பது மற்றும் அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார். மேலும், பள்ளிகளில் நிகழும் வன்முறை பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பயம், பதற்றம், சகிப்பின்மை போன்ற சூழல்களை உருவாக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT