Published : 12 Jan 2024 02:33 PM
Last Updated : 12 Jan 2024 02:33 PM
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான தேதியாக ஜனவரி 22 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 22 ஏன்?: இந்து புராணங்களின்படி, அபிஜித் முகூர்த்தம், மிருகசீரிஷ நட்சத்திரம், அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகா ஆகியவற்றின் சங்கமத்தின் போது ராமர் பிறந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நேரங்கள், ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு மீண்டும் வருவதால், அன்றைய தினத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அபிஜித் முகூர்த்தம்: வேதங்களின்படி, அபிஜித் முகூர்த்தம் என்பது ஒரு நாளின் மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த நேரம். அபிஜித் முகூர்த்தம் தினமும் வருவது தான். அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது. எளிதாக சொல்வதென்றால், நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் முகூர்த்தம் எனச் சொல்லப்படுகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ஜனவரி 22-ம் தேதி அன்று அபிஜித் முகூர்த்தமானது மதியம் 12:16 மணிக்குத் தொடங்கி மதியம் 12:59 மணிக்கு முடிவடையும். அபிஜித் முகூர்த்த நேரத்தில் சிவபெருமான் திரிபுரசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்துக்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, இந்த காலம் ஒருவரது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை நீக்குகிறது.
மிருகசீரிஷ (மிருகசீரிடம்) நட்சத்திரம்: மிருகசீரிஷம் என்பது ஜோதிடத்தின்படி 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரமாகும். மிருகசீர்ஷா என்பதன் பொருள் மான் தலை ஆகும். இந்த நட்சத்திரம் ஓரியானிஸ் விண்மீனைக் குறிக்கிறது. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், கவர்ச்சிகரமானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள். இந்த நட்சத்திரத்தில் தான் கடவுள் ராமர் பிறந்தார் என வரலாறு கூறுகிறது. ஜனவரி 22 அன்று மிருகசீரிஷ நட்சத்திரம் அதிகாலை 03:52 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதாவது ஜனவரி 23 அன்று காலை 07:13 மணி வரை தொடரும்.
அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம்: கிழமையையும், நட்சத்திரத்தையும் இணைத்து இந்த யோகங்களை கணிப்பது உண்டு. அதன்படி, மிருகசீரிஷா மற்றும் திங்கட்கிழமை (ஜனவரி 22) இணைந்து அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை ஜனவரி 22 காலை 07:13 மணிக்கு தொடங்கி மறுநாள் ஜனவரி 23 அதிகாலை 04:58 வரை தொடரும் என்பதால் அன்றைய நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குழந்தை ராமர்: ஜனவரி 22ல் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டன. இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்ததன் அடிப்படையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலை தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, புகழ்பெற்ற சிற்பி கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ் செதுக்கிய ராமர் சிலையே அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் சிலை தேர்வு செய்யப்படும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அறக்கட்டளை உறுப்பினர் பிம்லேந்திரா மோகன் பிரதாப் மிஸ்ரா, “நீங்கள் பார்க்கும்போது சிலை உங்களோடு பேசும்; உங்களை மயக்கும்” என கூறி இருந்தார்.
1 லட்சம் லட்டுகள்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் அனுப்புகிறது. அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 25 கிராம் எடையில் ஒரு லட்சம் லட்டுக்களை வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக்கொண்டுள்ளது.
500 वर्षों के तप की परिणति।
The Sacred Garbhagriha of Prabhu Shri Ramlalla Sarkar is ready in all its glory to welcome the aaradhya of millions of Ram Bhakts across the world. pic.twitter.com/WWJjWc41va— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) January 8, 2024
ராமர் கோயிலுக்கு குவியும் பரிசுகள்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீராமஜென்மபூமி கோயில் அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பொருட்கள் பரிசுகளாக அனுப்பப்படுகின்றன. சீதையின் பிறந்த மண்ணாகக் கருதப்படும் நேபாளத்தின் ஜனக்புரி ஜானகி கோயிலில் இருந்து 30 வாகனங்களில் 3,000 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கம், வெள்ளியில் தயாரான பாதுகைகள், கண்கவர் துணிகள், ஆபரணங்கள் உள்ளன. சீதை சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இந்த இடத்திலிருந்து பெரிய பாறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாறையில் சீதை சிறை வைக்கப்பட்ட காட்சிகள் ஓவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீளத்தில் தூபம் போடுவதற்கான குச்சிகள் வந்துள்ளன. தூபம் போடும்போது எழும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் இந்த குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அலிகர் நகரில் இருந்து சத்ய பிரகாஷ் சர்மா என்ற பூட்டு தயாரிப்பாளர் ஒருவர், 10 அடி உயரம், 4.6 அடி அகலம் மற்றும் 400 கிலோ எடையில் பூட்டு தயாரித்து அனுப்பியுள்ளார். அலிகர் அருகிலுள்ள ஏட்டாவில் இருந்து ராட்சத கோயில் மணி தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2,100 கிலோ. சூரத் வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களும் 2 கிலோ வெள்ளிக் கட்டியும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT