Published : 12 Jan 2024 01:52 PM
Last Updated : 12 Jan 2024 01:52 PM

டெல்லியை வாட்டிய 3.8 டிகிரி கடும் குளிர்: இந்தப் பருவத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகவும் குளிரான காலை இன்று (வெள்ளிக்கிழமை) பதிவானது. டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. அடர்பனி போர்வை போல நகரின் மீது படர்ந்து காணப்பட்டதால் காட்சி தெரியும்நிலை பூஜ்ஜியமாக இருந்தது. இதனால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

பனிமூட்டம் காரணமாக டெல்லி தொடர்புடைய 23 ரயில்கள் 6 மணிநேரம் வரை தாமதமாக இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலைய பகுதியில் பனிமூட்டம் காரணமாக காட்சி தெரியும் நிலை பூஜ்ஜியமாக இருந்தது. விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை ஒன்று முதல் நான்கு மணிநேரம் வரை தாமதமாகின. விமானம் தொடர்பான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளுக்கு டெல்லி விமானநிலையம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குளிர்நிலை குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அடர்பனி காரணமாக காட்சி தெரியும் நிலை பூஜ்ஜியம் நிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வியாழக்கிழமை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. அது சராசரி வெப்பநிலையை விட இரண்டு டிகிரி குறைவாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்சியஸாக இருந்தது இதுவும் சராசரியை விட இரண்டு டிகிரி குறைவு.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜன.12 முதல் 16-ம் தேதி வரை பஞ்சாப்பின் சில பகுதிகள் மற்றும் ஹரியாணா மற்றும் சண்டிகரின் உள்ளடங்கிய பகுதிகளில் காலை சில மணி நேரங்களுக்கு அடர்த்தி முதல் மிக அடர்த்தியான பனி மூட்டம் நிலவும்.

அதேபோல், ஜன.12,13 தேதிகளில் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் காலையில் சில மணி நேரங்களுக்கு அடர்த்தி மற்றும் மிக அடர்த்தியான பனி மூட்டம் காணப்படும். ஜன.12-ம் தேதி மேற்கு வங்கத்தின் கங்கை பகுதிகள், ஒடிசா மற்றும் ஜம்மு பகுதிகளிலும், ஜன.12, 13 தேதிகளில் இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்கத்தின் இமாலயப்பகுதிகள், சிக்கிம், வடக்கு மத்தியப் பிரதேசம் பகுதிகளிலும், ஜன.12 முதல் 16-ம் தேதி வரை அசாம், மேகாலயா, மிசோரம், மற்றும் திரிபுரா பகுதிகளில் மிகவும் அடர்த்தியான பனி மூட்டம் காணப்படும்.

ஜன.11,12-ம் தேதிகளில் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகரின் சில பகுதிகளிலும், ஜன.13 முதல் 15ம் தேதி வரை பஞ்சாப்பின் உள்ளடங்கிய பகுதிகளில் குளிர்நிலை தொடரும். அதேபோல், ஜன. 12-ம் தேதி உத்தராகண்ட்டின் உள்ளடங்கிய பகுதிகளில் பனிமூட்டம் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே, ஜனவரி 16ம் தேதி மேற்கு இமயமலைப் பகுதிகளில் புதிய மேற்கு இடையூறு (குளிர்கால புயல்) ஒன்று பாதிக்கும். அதன் தாக்கத்தால் ஜன.12,13 தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் - லடாக் - கில்கிட் - பல்திஸ்தான் - முஸாபர்பாத் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் மிதமான மழை மற்றும் பனிபொழிவு இருக்கும்.

அதேபோல், ஜன.16 மற்றும் 17ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் - லடாக் - கில்கிட் - பல்திஸ்தான் - முஸாபர்பாத் மற்றும் இமாச்சலப்பிரதேசம், உத்தரப் பிரதேசத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் மிதமான மழை மற்றும் பனி பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழைகுறித்து முன்னறிவிப்பு: ஜன.15ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, கேரளாஸ ஆந்திர கடலோரத்தின் உள்ளடங்கிய பகுதிகள், ஏனாம், ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உள்ளடங்கிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறைவதற்கான சூழல்நிலவுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் மிதமான மழை பொழியும் அதன் பின்னர் வறண்ட வானிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x