Published : 12 Jan 2024 05:54 AM
Last Updated : 12 Jan 2024 05:54 AM

மத உணர்வுகளை புண்படுத்துவதாக ம.பி.யில் புகார்: நயன்தாரா மீது வழக்கு பதிவு @ ‘அன்னபூரணி்’ சர்ச்சை

புதுடெல்லி: நடிகை நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான "அன்னபூரணி" திரைப்படத்தில் கடவுள் ராமர் அவமதிப்பு செய்யப்பட்டதாக எழுந்தபுகாரையடுத்து அவர் மீது மத்திய பிரதேச மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அவரது 75-வது திரைப்படம் ‘அன்னபூரணி’ . இதில், அவர் சமையல்கலை நிபுணராக நடித்திருந்தார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தில் உள்ள சில வசனங்கள் மற்றும் காட்சிகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது எனமகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள இந்து அமைப்புகள் காவல் நிலையங்களில் புகார்அளித்தன. குறிப்பாக, கடவுள்ராமரை அவமதிக்கும் வகையில்சில வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்து விரோத கருத்துகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தப் படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கும் எதிர்ப்புகள் வலுத்தன. இது, தொடர்பாக சமூக வலைதளங்களின் வாயிலாகவும் பரவலாக கண்டன குரல்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், அன்னபூரணி திரைப்படம் ஓடிடி தளத்திலிருந்து திடீரென திரும்பப் பெறப்பட்டது.

இதனிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்து சேவா பரிஷத் முன்னணி அமைப்பு ஜபல்பூர் மாவட்ட ஓம்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்பேரில், நடிகை நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் ஜதின் சேத்தி மற்றும் ஆர் ரவீந்திரன், நெட்பிளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க தலைவர் (கன்டன்ட் ஹெட்) மோனிகா ஷெர்கில் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு அல்லதுமாற்றப்பட்டு ‘அன்னபூரணி’ திரைப்படம் மீண்டும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த திரைப்படம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டு வெளியான திரைப்படத்துக்கு எப்படி தடை ஏற்படுத்த முடியும் என ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய, 'அன்னபூரணி' திரைப்படத்தில் பிராமணப் பெண் வேடத்தில் தோன்றும் நயன்தாரா அசைவ உணவுகளை சமைப்பது, சாப்பிடுவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x