Published : 12 Jan 2024 04:37 AM
Last Updated : 12 Jan 2024 04:37 AM

மக்களவை தேர்தல் தயார் நிலை குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை: டெல்லியில் 2 நாள் கூட்டம் தொடங்கியது

மக்களவை தேர்தல் தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. பாஜகவை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன.

பிரச்சார திட்டங்களையும் அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இண்டியா கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர், ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதால், இந்த பேச்சுவார்த்தையில் அதிகதொகுதிகளை கேட்டு பெறுவது காங்கிரஸுக்கு பெரும் சவாலாக உள்ளது. மாநிலங்களில் செல்வாக்கு உள்ள கட்சிகள் அதிகஇடங்களில் போட்டியிட விரும்புகின்றன. பாஜக தரப்பில் தேசியதலைவர் ஜே.பி நட்டாவும் தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே, நாடு முழுவதும்தேர்தலை நியாயமாக, அமைதியாக நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களவை தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும்வகையில், தேர்தல் ஆணையம்சார்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை மையத்தில் (ஐஐஐடிஇஎம்) நேற்று தொடங்கியது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரேதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். இன்றும் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த 2 நாள் கூட்டத்தில், மாநில அளவில் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x