Published : 11 Jan 2024 06:25 PM
Last Updated : 11 Jan 2024 06:25 PM

இந்தியாவின் தூய்மையான நகரம்: முதலிடம் பெற்ற இந்தூர், சூரத்துக்கு விருது வழங்கல்

புதுடெல்லி: 2023-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர், சூரத் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. இதற்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த 2023-ம் ஆண்டுக்கான தூய்மை ஆய்வு விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார். அதன்படி, தூய்மையான நகரங்கள், தூய்மையான ராணுவக் குடியிருப்பு, நகர தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு, கங்கா நகரங்கள், சிறப்பாகச் செயல்படும் மாநிலம் ஆகிய பிரிவுகளின் கீழ் விருது பெற்ற 13 பேர் பாராட்டப்பட்டனர்.

இந்த ஆண்டு தூய்மையான நகரத்திற்கான முதல் விருதை துறைமுக நகரமான சூரத், 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்த இந்தூருடன் இணைந்து பெற்றது. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில், சஸ்வத், பதான், லோனாவாலா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் ராணுவக் குடியிருப்பு வாரியம் தூய்மையான ராணுவக் குடியிருப்பு வாரியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூய்மையான கங்கை நகரங்களில் வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகியவை முதல் இரண்டு விருதுகளைப் வென்றுள்ளன. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களுக்கான முதல் மூன்று விருதுகளை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வென்றன. மொத்தம் 110 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, தூய்மை நகரங்கள் 2023 தகவல் பலகையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "தூய்மை நகரங்கள் நடவடிக்கையில் அனைவரும் பங்களிப்பது முக்கிய முன்னேற்றம். பரந்த பங்கேற்புடன் நடத்தப்படும் தூய்மை ஆய்வு, தூய்மையின் அளவை உயர்த்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும். தூய்மைப் பிரச்சாரங்கள் பெண்களின் பொருளாதாரத் தற்சார்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. தூய்மை இயக்கத்தின் முன்கள வீரர்களாக நமது தூய்மை உறவினர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலனை உறுதி செய்ய பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது கண்டு மகிழ்ச்சி.

தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்ட கழிவு மேலாண்மையில் மறுசுழற்சி என்பது நிலையான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கழிவுகளிலிருந்து செல்வம் என்ற கருத்தாக்கத்தை நாம் ஆழமாக ஆராய்ந்தால், அனைத்தும் மதிப்பு வாய்ந்தவை, எதுவும் வீண் அல்ல என்பது தெளிவாகிறது. இந்த முற்போக்கான சிந்தனை, பசுமைக் கழிவுகளிலிருந்து உயிரிவாயு தயாரிக்கவும், கழிவுகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருளிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பெருமளவிலான நகர்ப்புற நிலங்கள் குப்பைமேடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. இதுபோன்ற குப்பை மேடுகள் நகர்ப்புற மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இளம் தலைமுறையினர் அனைத்து நகரங்களையும் முழு நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்தால், 2047 ஆம் ஆண்டின் இந்தியா நிச்சயமாக உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு அதன் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும். உலகின் தூய்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் பெரிய குறிக்கோளுடன் நாட்டின் அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x