Published : 11 Jan 2024 03:44 PM
Last Updated : 11 Jan 2024 03:44 PM
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, இந்தப் பொருள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தது. இதற்கு, மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "1952-ல் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான முதல் பொதுத் தேர்தல், நாடு முழுவதும் ஒரே நேரத்தில்தான் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தும் சில காலங்களுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அதன் பிறகு அந்த முறை சிதைந்துவிட்டது.
உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். உங்கள் உருவாக்கம் மற்றும் முன்மொழிவுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாதவாறு இருப்பதுதான் நமது அமைப்பின் அடிப்படை. அதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாமல் இருப்பது என்பது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்" என்று மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வரும் 15-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் தலையைிலான ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழு கடந்த 6ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் தெரிவிக்கும் கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். கருத்துகளை ஆய்வுக்குழுவின் இணையதளம் அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு குழு அமைத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அந்த உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உள்ளனர்.
இந்தக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டார். எனினும், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தற்போதுள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதே இக்குழுவின் நோக்கம். அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் இவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றில் தேவைப்படும் திருத்தங்களை ஆய்வு செய்து அது குறித்து இக்குழு பரிந்துரைக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு இக்குழு இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. மேலும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கோரியது. 6 தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத 7 கட்சிகள் ஆகியவற்றுக்கு இக்குழு கடிதம் அனுப்பி இருந்தது. அதில், ஒரே நாளில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT