Published : 11 Jan 2024 03:26 PM
Last Updated : 11 Jan 2024 03:26 PM
புதுடெல்லி: “ஜம்மு காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் தீவிரவாத செயல்களைத் தூண்டிவிடுவதில் நம் எதிரிகளின் பங்களிப்பு உள்ளது” என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பங்கேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், இந்தியா - மியான்மர் எல்லைப் பாதுகாப்பு, சீன எல்லைப் பிரச்சினை எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியது: “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் கடந்த 2017, 18 வரை அமைதி இருந்தது. ஆனால், இப்போது தீவிரவாத செயல்களை இங்கு தூண்டிவிடுவதில் எதிரிகளின் பங்களிப்பு உள்ளது. கடந்த 5, 6 மாதங்களாகவே இப்பகுதிகளில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இது கவனிக்கத்தக்கது.
முன்பில்லாத அளவுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலாக தற்போது இயல்பு திரும்பியுள்ளதால் எதிரிகள் அதைப் பொறுக்க முடியாமல் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 45 தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 5 ஊடுருவல் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. அதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லைத் தாண்டிய பயங்கரவாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரஜோரி, பூஞ்ச், பீர் பாஞ்சல் பகுதிகளில் அமைதியை மீட்டெடுக்க 9 அம்ச திட்டத்தை வகுத்துள்ளோம். ராணுவமும், போலீஸும் கூடுதல் இணக்கத்துடன் செயல்பட்டால் நிச்சயமாக இங்கு தீவிரவாதச் செயல்களை முறியடிக்கலாம்.
மேலும், ராணுவத்தில் நவீன போர் தளவாடங்களை சேர்த்து வருகிறோம். மின்னணு உபகரணங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி போர்த் திறனை மேம்படுத்தியுள்ளோம். ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைக்கு கூடுதல் வலு சேர்க்கப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள வடக்கு எல்லையில் நிலைமை சீராக உள்ளது என்றாலும் முற்றிலும் பதற்றம் நீங்கிவிடவில்லை. (இந்தியாவின் வடக்கே சீனா, நேபாளம், பூடான் நாடுகள் உள்ளன) ராணுவ, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்துதான் வருகிறோம். வடக்கு எல்லையில் எப்போதும் படைகளின் தயார்நிலை மிகை மிஞ்சியதாகவே உள்ளது. படைகள் குவிப்பும் அதிகம் என்றாலும், அது சீரானதாக இருப்பதை உறுதி செய்துகொள்கிறோம்.
இந்தியா - மியான்மர் எல்லையைப் பொறுத்தவரை அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் பூடான் மக்கள் சிலர் தஞ்சம் கோரும் நிகழ்வுகள் நடந்துள்ளன. எல்லையில் நிலவும் இனக்குழு மோதல்களைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். சில இனக் குழுக்கள் மணிப்பூருக்குள் ஊடுருவ முயல்வதை அறிந்து மணிப்பூர் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம். அசாம் ரைபில்ஸ் படையின் 20 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஊடுருவல்களை முறியடிக்க மியான்மருடனான எல்லை வேலியை மேலும் பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று மனோஜ் பாண்டே கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT