Published : 11 Jan 2024 11:57 AM
Last Updated : 11 Jan 2024 11:57 AM
புதுடெல்லி: காங்கிரஸ் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யைத் தொடங்குவதற்கு வடகிழக்கை (NE) தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரஸுக்கு தகுதி இல்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். வருகிற ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத ஜோடோ நியாய யாத்திரை தேசிய அரசியலில் மிகவும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அசாமில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வியூகத்தை மதிப்பாய்வு செய்வார் என்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும் விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து குவஹாட்டியில் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, “காங்கிரஸ் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யைத் தொடங்குவதற்கு வடகிழக்கை தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு இது ’பாரத் டோடோ அநியாய யாத்திரை’ (Bharat Todo Anyay Yatra) போல் தெரிகிறது.
அநீதிக்கு அடித்தளமிட்டு இந்தியாவை உடைத்த காங்கிரஸ், இப்போது பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்வது விந்தையானது. காங்கிரஸ் அரசாங்கத்தை நடத்துவதற்கு தகுதியற்றது. அதேவேளையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதியற்றது என நினைக்கிறேன். இண்டியா கூட்டணிக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. அதில் ஒன்று தங்களது சொத்துக்களையும், தங்களது கட்சி தலைவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கவே இண்டியா கூட்டணியை அமைத்துள்ளனர். 2024 பொதுத் தேர்தலில் பாஜக மற்றொரு வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT