Published : 11 Jan 2024 10:20 AM
Last Updated : 11 Jan 2024 10:20 AM
புதுடெல்லி: தாய், மகன் உறவை கொச்சைப்படுத்தும் வகையிலான வீடியோக்களை ‘ட்ரெண்ட்’ என்ற பெயரில் அனுமதித்த விவகாரத்தில் யூடியூப் இந்தியா அதிகாரிக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 15 ஆம் தேதியன்று ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
யூடியூப் இந்தியாவின் ‘அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கை’ துறை தலைவர் மீரா சாட்டுக்கு இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “யூடியூப் சேனலில் சமீபகாலமாக பரவிவரும் தாய் - மகன் உறவைக் கொச்சைப்படுத்தும் செயல்கள் கொண்ட வீடியோக்கள் கண்டிக்கத்தக்கவை. சமூகத்தில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடனடி நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாக இந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. தாய் - மகன் சவால் வீடியோக்கள் என்ற பெயரில் ட்ரெண்டாகும் இந்த வீடியோக்களை தடை செய்வது அவசியம். இந்த வீடியோக்கள் 2012 போக்ஸோ சட்டத்துக்கு எதிரானவை. யூடியூப் நிறுவனம் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். குற்றவாளிகள் சிறை செல்ல நேரிடும். இதுபோன்ற வீடியோக்களை ஊக்குவித்து வியாபாரம் செய்தால் அது பாலுறவு வீடியோக்களை வைத்து வியாபாரம் செய்வதற்கு ஒப்பானதாகும். குழந்தைகளை பாலியல் சீண்டலுக்கு உண்டாக்கி வீடியோ வெளியிடும் எந்த தளமும் சிறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோ ட்ரெண்ட் பின்னணி: யூடியூப் தளத்தில் அவ்வப்போது சில ‘சேலஞ்ச்’ வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் சமீபமாக ஒரு போக்கு ட்ரெண்டாகிறது. அதாவது இளம் தாய்மார்கள் தங்களின் பதின்ம வயது மகனுடன் ஆடிப்பாடி, கொஞ்சி வீடியோக்களை ட்ரெண்டாக்க வேண்டும். ஆனால் தாய் - மகன் அன்பு முத்தம் போல் அல்லாமல் இளம் தாய்மார்கள் பாலிவுட் பாடல்கள் பின்னணியுடன் சற்று விரசமாக போஸ் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது, நெருக்கமாக போஸ் கொடுப்பது, பாலிவுட் காட்சிகள் நடித்துக்காட்டி வீடியோ வெளியிடுவது ஆகியன விமர்சனங்களை ஈர்த்துள்ளன. இதற்கு கடும் கண்டனக் குரலும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தான் யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT