Published : 11 Jan 2024 09:17 AM
Last Updated : 11 Jan 2024 09:17 AM
இந்தூர்: ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை காங்கிரஸ் புறக்கணித்துள்ள நிலையில் இதனைக் கண்டித்துள்ளார் மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான். இது தொடர்பாக அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,“ராமர் நமது கடவுள். அவர் பாரதத்தின் ஆன்மாவாக, அடையாளமாக திகழ்கிறார். ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை ஏற்க மறுப்பது இந்தியாவின் கலாச்சாரத்தை, அடையாளத்தை நிராகரிக்கும் செயலாகும். இதுபோன்ற செயல்களால் தான் காங்கிரஸ் கட்சி தற்போது விளிம்புநிலையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
உ.பி. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங், பிஹார் முதல்வர்நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்டுமானப் பணி முழுமையாக முடியாத நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக கோயில் திறப்பு விழாவை நடத்துகின்றனர். இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என தெளிவாக தெரிவதால், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்” எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு ம.பி. முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT