Published : 11 Jan 2024 05:45 AM
Last Updated : 11 Jan 2024 05:45 AM

லட்சத்தீவு செல்ல மார்ச் மாதம் வரை விமான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது

லட்சத்தீவின் மினிக்காய் தீவில் கடந்த 1885-ம் ஆண்டில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்.

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு லட்சத்தீவு சுற்றுலா பிரபலம் அடைந்து வருவதால், அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. அதுவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை இயக்குகிறது. கொச்சி-அகத்தி, அகத்தி-கொச்சி இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு பயணத்தின் போது அழகிய தீவின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.

குறிப்பாக, இந்திய சுற்றுலாப்பயணிகள் லட்சத்தீவை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரையில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், லட்சத்தீவு பயணத்தை எளிமையாக்குவதற்காக மின்னணு நுழைவுச் சீட்டு இனி முற்றிலும் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் லட்சத்தீவு செல்ல வங்கியில் ரூ.200-ஐ செலுத்திவிட்டு, அதற்கான சலானை சமர்ப்பித்து நுழைவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

இப்போது இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் நுழைவுச் சீட்டு கிடைத்துவிடும். மேலும் அகத்தி விமான நிலையத்தை பெரிதாக்கவும், மினிக்காய் தீவில் ஏர்பஸ் 320 மற்றும் போயிங் 737 ரக விமானங்கள் வந்து செல்வதற்காக புதிய பசுமை விமான நிலையமும் கட்டப்பட உள்ளது.

இதன் மூலம் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான நிலையத்தை ராணுவமும் பயன்படுத்திக் கொள்ளும். இதற்கிடையில், சுஹேலி மற்றும் கமாட் தீவுகளிலும் நவீன ஓட்டல்கள், ரெசார்ட்டுகள் கட்ட பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அகத்தி மற்றும் கவரட்டி தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான கூடாரங்களை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று லட்சத்தீவு நிர்வாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் கிரி சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x