Published : 11 Jan 2024 06:23 AM
Last Updated : 11 Jan 2024 06:23 AM

மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெல்ல பாஜக இலக்கு: பிற கட்சி எம்.பி.க்கள், தலைவர்களை கட்சிக்கு இழுக்க திட்டம்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக உள்ளது. அதேவேளையில் பாஜக.விடம் இருந்துஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணியின் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முதல் கட்டமாக ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்துள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளும் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கான உத்திகள் குறித்த முக்கிய கூட்டம் ஒன்றை பாஜக கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியது. இதில் பாஜகவின் பல்வேறு பொதுச் செயலாளர்களுக்கும் பல்வேறு பொறுப்புகளை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வழங்கினார். வினோத் தாவ்டே என்ற பொதுச் செயலாளருக்கு இணைப்புக் குழு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

பிற கட்சிகளில் இருந்து செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களை பாஜகவுக்கு கொண்டு வருவது குறித்து இணைப்புக் குழு ஆராயும். தொகுதியில் அந்த நபருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவருக்குள்ள திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். பாஜக வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று கருதப்படும் இடங்களில் மட்டும் கட்சி இதனை ஆராயும். கடந்த தேர்தலில் இழந்த 160 இடங்களில் கட்சி கவனம் செலுத்தி வருவதற்கும் இந்த முடிவுக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

1984-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே மக்களவையில் 400 எண்ணிக்கையை கடந்துள்ளது. இதன் பிறகு 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வரும் வரை எந்தக் கட்சியும் மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், 2014 மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. கடந்த 2019 தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த எண்ணிக்கையை இந்த தேர்தலில் 400-ஆக உயர்த்த பாஜக தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணி, பொதுச் செயலாளர் ராதாமோகன் தாஸ் அகர்வாலிடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் மற்றும் பிற தொடர்புடைய பணிகளை சுனில் பன்சால் மற்றும் பிற பொதுச் செயலாளர்கள் கவனிப்பார்கள்.

நாடு முழுவதும் உள்ள பவுத்தர்களின் மாநாடுகளை துஷ்யந்த் கவுதம் ஏற்பாடு செய்து, பிரதமர் மோடி அரசு மேற்கொண்டுள்ள பணிகளை எடுத்துரைப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x