Published : 11 Jan 2024 06:38 AM
Last Updated : 11 Jan 2024 06:38 AM

ராகுல் காந்தி யாத்திரைக்கு மணிப்பூர் அரசு நிபந்தனையுடன் அனுமதி

இம்பால்: மணிப்பூரில் ராகுல் யாத்திரைக்கு மாநில அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.

மணிப்பூரின் இம்பாலில் வரும் 14-ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை, மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிகிறது. 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டப்பேரவை தொகுதிகள் வழியாக 66 நாட்களில் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் தொடக்க விழாவை கிழக்கு இம்பாலில் உள்ள ஹட்டா காங்ஜெய்புங் அரண்மனை மைதானத்தில் நடத்த மாநில அரசிடம் காங்கிரஸ் கட்சி அனுமதி கேட்டு காத்திருந்தது.

இது தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா உள்ளிட்டோர் நேற்று காலையில் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு கெய்ஷாம் மேகசந்திரா கூறும்போது, “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த கவலைகளை முதல்வர் காரணம் காட்டி, தனது அரசால் அனுமதி வழங்க முடியாது என கூறிவிட்டார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. தொடக்க விழாவை தவுபால் மாவட்டம் கோங்ஜோமில் உள்ள தனியார் இடத்துக்கு மாற்ற இருக்கிறோம்” என்றார்.

இந்நிலையில் அரண்மனை மைதானத்தில் ராகுல் யாத்திரைக்கு சில நிபந்தனைகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் யாத்திரையை கொடியசைத்து தொடங்கும் நிகழ்ச்சி மட்டுமே நடத்த வேண்டும். தொடக்க விழாவில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x