Published : 10 Jan 2024 07:36 AM
Last Updated : 10 Jan 2024 07:36 AM
நாக்பூர்: மகாராஷ்டிராவில் 23 தொகுதிகளை ஒதுக்குமாறு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கேட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் சிவசேனா எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறும்போது, “கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். எங்கள் கட்சியிலிருந்து சில எம்.பி.க்கள் தற்போது விலகியுள்ளனர். இருந்தபோதும் எங்களுக்கு 23 தொகுதிகள் தேவை. தேசியவாத காங்கிரஸ் கட்சி வென்ற இடங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் எழப் போவதில்லை” என்றார்.
தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் முடிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக தொகுதிகளை சிவசேனா கேட்பதால், எம்விஏ அகாடி கூட்டணித் தலைவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரவீன் குந்தே பாட்டீல் கூறும்போது, “ஜனவரி 13, 14-ம் தேதிகளில் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இதுதொடர்பான தெளிவான நிலை ஏற்படும் என்றார்.
டெல்லி, பஞ்சாபில்.. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் பேச்சுவார்தையில் ஈடுபட்டது. அப்போது, டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 3-ஐயும், பஞ்சாபில் உள்ள 13-ல் 6 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், முறையான அறிவிப்பு வெளியாகமலேயே இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளனர். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரை மீண்டும் சந்தித்துப் பேசுவதென தலைவர்கள் மட்டத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், டெல்லியைப் பொறுத்தவரையில், கிழக்கு டெல்லி, வடகிழக்கு மற்றும் சாந்தினி சவுக் தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தேசிய கூட்டணிக் குழு ஒருங்கிணைப்பாளர் முகுல் வாஸ்னிக், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், சந்தீப் பதக், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT