Published : 09 Jan 2024 07:08 PM
Last Updated : 09 Jan 2024 07:08 PM
கொல்கத்தா: புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புக்காக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கிளாசிக்கல் இசைப் பாடகர் உஸ்தாத் ரஷித் கான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 55. உஸ்தான் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
ராம்பூர் சஹாஸ்வான் கரானா இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பாடகரான உஸ்தாத் ரஷித் கான், கரானாவின் நிறுவனரான இனயத் ஹுசைன் கானின் கொள்ளுப்பேரனாவார். உஸ்தாத்தின் மரணம் குறித்து அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் எங்களால் முடிந்த வரை போராடினோம். ஆனால் தோல்வியடைந்துவிட்டோம். 3.45 மணியளவில் அவர் உயிரிழந்தார்" என்று தெரிவித்தனர்.
உஸ்தாத்தின் மரணம் குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "உஸ்தானின் மரணம் குறித்து அறிந்து வேதனையுற்றேன். அவரது இழப்பு நாட்டுக்கும் ஒட்டுமொத்த இசை உலகுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். நான் மிகுந்த வலியுடன் இருக்கிறேன். உஸ்தான் ரஷித் கான் இனி இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று தெரிவித்தார்.
முதல்வர் மேலும் கூறுகையில், “ரஷிதின் உடல் இன்று மார்ச்சுவாரியில் வைக்கப்படும். பின்பு புதன்கிழமை ரபிந்தர சதானுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ரசிகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம். புதன்கிழமை அவரது இறுதிச் சடங்கில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும்" என்றார்.
வெண்டிலேஷன் கண்காணிப்பில் இருந்த உஸ்தாத்துக்கு கடந்த மாதம் பெருமூளை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT